திருவள்ளூர் அருகே உடல்நலக் குறைவால் உயிரிழந்த பசுவின் வயிற்றில் இருந்து, 60 கிலோ எடையிலான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
அரசு பல முறை அறிவுறுத்தியும், எச்சரித்தும் பிளாஸ்டிக் கழிவுகளை, பொதுமக்கள் கண்ட இடங்களில் கொட்டுவது தொடர்கதையாகவே உள்ளது. இதனால், கால்நடைகள் மட்டுமின்றி, வனவிலங்குகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அண்மையில் கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை செல்லும் பாதையில் இருந்த யானையின் சாணத்தில், முகக் கவசம், காலியான பால் பாக்கெட், சானிடரி நாப்கின் உள்ளிட்டவை இருந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், சென்னை போரூரைச் சேர்ந்த சாய் விக்னேஷ் என்பவர், சாலைகளில் அடிபடும் மற்றும் ஆதரவற்ற கால்நடைகள் மற்றும் விலங்குகளை பராமரிப்பதற்காக, திருவள்ளூர் மாவட்டம், சென்றாயன் பாளையத்தில், சரணாலயம் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு பராமரிக்கப்பட்ட பசு ஒன்று, அண்மையில் கடும் உடல் உபாதைகளால் உயிரிழந்தது. அதற்கு அறுவை சிகிச்சை செய்தபோது அதன் வயிற்றிலிருந்து, பாலித்தீன் பைகள் போன்ற 60 கிலோ எடையிலான பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. சாலைகளில் கிடக்கும் குப்பைகளை தின்பதால், இதேபோன்று, பல மாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழப்பதாக, சாய் விக்னேஷ் வேதனை தெரிவிக்கிறார்.
மாடுகளை வளர்ப்போர் அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும், குப்பைக் கிடங்குகளில் மாடுகளை மேயவிடக் கூடாது எனவும் கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகள் முதல் நோயாளிகள் வரை பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தக் கூடிய, பசுவின் பால் பிளாஸ்டிக் பொருட்களால் நஞ்சாக மாறும் சூழல் காணப்படுகிறது. இதனை உணர்ந்து பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவதோடு, அதன் பயன்பாட்டை தவிர்க்கவும் முயல வேண்டும் என, கால்நடை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.