சமீப நாட்களில் மாணவர்கள் தொடர்பாக வரும் செய்திகள் அச்சமூட்டும் வகையில் இருக்கின்றன. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான மோதல் நாளுக்கு நாள் அதிகரிப்பதன் விளைவாக பல சம்பவங்கள் செய்திகளாக நாள்தோறும் வெளிவருகின்றன. இந்தப் பிரச்சனை ஒருபுறமிருக்க, கல்லூரி மாணவர்களுக்கான மோதல் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
கொஞ்ச காலம் பெரிதாக கவனிக்கப்படாமல் இருந்த ரூட் தல பிரச்சனை, பேருந்து கோஷ்டி மோதல், கல்லூரிகளுக்குள்ளான மோதல் தற்போது மீண்டும் சென்னையை அடுத்த செங்குன்றம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சம்பவத்தின் மூலம் மீண்டும் தொடங்கியிருக்கிறது.
கடந்த சில காலமாகவே சென்னை அம்பேத்கர் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குள் கோஷ்டி மோதல் இருந்து வந்தது. இந்நிலையில், செங்குன்றம் பேருந்து நிலையத்தில் தடம் எண் 65H என்ற பேருந்து திருவள்ளூர் செல்வதற்காக நின்றுகொண்டிருந்தது.
இந்தப் பேருந்தின் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கே வந்த அம்பேத்கர் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கிரிக்கெட் மட்டையுடன் வந்து இந்த மாணவர்களிடம் தீடீரென தகராறில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பயின்று வரும் பட்டாமிராமைச் சேர்ந்த ராஜன் என்ற மாணவருக்கு பல் உடைந்தது.

பேருந்து கண்ணாடிகள் உடைப்பு
மேலும், அங்கே நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தின் கண்ணாடிகளையும் மாணவர்கள் உடைத்தனர். கலவரச் சூழல்போல் மாறியதால், பொதுமக்களும், வயதானவர்களும் உயிருக்கு பயந்து அலறியபடி சிதறி ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், தகராறில் ஈடுபட்ட இரண்டு கல்லூரி மாணவர்களையும் விசாரித்தனர்.
Must Read : முதல் மனைவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. உறவுக்கார பெண்ணுடன் 2-வது திருமணம் -மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
இதில், 7 பேரை காவல்நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் குறித்து தொடர்ந்து வரும் இதுபோன்ற செய்திகளால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
செய்தியாளர் - பார்த்தசாரதிஇன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.