சதுரங்க வேட்டை பட நாயகன் காந்திபாபு பாணியில் வாழ்ந்து காட்டிய திருப்பூரை சேர்ந்த ராஜசேகர். 'ஒரு மனிதனிடம் பரிதாபத்தை எதிர்பார்ப்பதை விட அவனது ஆசையை தூண்ட வேண்டும். லட்சத்தில் ஏமாற்ற சில ஆயிரங்கள் வேண்டும், கோடியில் ஏமாற்ற லட்சங்கள் வேண்டும்' என ரூட்டு போட்டு ஆட்டைய போட்ட திருப்பூரை சேர்ந்த ராஜசேகர் சமீபத்தில் பிடிபட்டுள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் IHFL என்ற கடன் வழங்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். அதோடு திருப்பூரைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் மனைவி கவிதா என்பவருடன் இணைந்து கட்டுமான நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதன் மூலம் பொதுமக்களை ஏமாற்றினால் விரைவில் மாட்டி விடுவோம். சில லட்சங்கள் மட்டுமே சம்பாதிக்கலாம் என கட்டிட கான்ட்ராக்டர், பொறியாளர்களை ஏமாற்ற திட்டமிட்டனர்.
அதன்படி மதுரையில் 25 தொகுப்பு வீடுகளை பெரிய கட்டுமான நிறுவனம் மூலம் கட்டி உள்ளார். அதனை அடிப்படையாகக் கொண்டு திருப்பூர், மதுரை என பல இடங்களிலும் 1,000 வீடுகளை பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்ட உள்ளதாகவும் அதில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தர உள்ளதாக விளம்பரம் செய்துள்ளார்.
இவரிடம் நிலம் வாங்கி வீடு கட்ட குவிந்த கூட்டத்தை விட வீடு கட்டி தருகிறோம் என குவித்த கட்டுமான நிறுவனங்களே அதிகம். ராஜசேகர் வலை விரித்ததும் இந்த நிறுவனங்களுக்குதான். விளம்பரம் மட்டும் இல்லாது கேரளாவில் உள்ள கட்டுமான நிறுவனங்களை புரோக்கர் மூலம் வரவழைத்து 1000 வீடு 10 ஆயிரம் வீடு என அளந்து விட்டுள்ளார்.
15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் தொகுப்பு வீடு ஒன்றில் 3 முதல் 4 லட்சம் லாபம் மட்டுமே கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி உள்ளார். மேலும் தங்களது முதல் புராஜெக்ட் மதுரையில் பெரிய நிறுவனத்தால் கட்டப்பட்டுள்ளது. தற்போது சிறிய நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்க உள்ளோம்.
அதோடு கவிதாவின் பெயரில் நிலம் இருப்பதாகவும் அவர் சென்னை சில்க்ஸ் ஓனர் உறவினர் என கேரளாவில் இருந்து வந்தவர்களிடம் சொல்ல, இவர் கூறியதை கேட்டவர்கள் மெய்சிலிர்த்து கட்டிடம் கட்ட ஒப்புக் கொண்டனர். அப்போது ராஜசேகர் போட்ட கிடுக்கி பிடியில் தங்களை அறியாமல் சிக்கி கொண்டு இன்று வரை தவித்து வருகின்றனர்.
அனைத்தும் முடிந்து ஒப்பந்தம் போடும் நேரத்தில் இவ்வளவு பெரிய புராஜெக்ட் செய்கிறோம். உங்களை நாங்கள் எப்படி நம்புவது பாதியில் பணியை விட்டு போய்விட்டால் என்ன செய்வது? எனவே வைப்புத் தொகையாக முன்பணம் செலுத்துங்கள் என தெரிவித்துள்ளார். இவரது பேச்சை கேட்டு நம்பிய கட்டுமான நிறுவனங்கள் உடனடியாக பணத்தை தயார் செய்து கட்டி உள்ளனர்.
ஆனால் இவர்கள் கூறியபடி எந்த பணியும் நடைபெற வில்லை. ராஜசேகர் குறிப்பிட்ட இடத்தில் பணி செய்ய முயன்றபோது அது வேறு நபரின் இடம் என்பது தெரியவந்தது. பணம் செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக பணம் கேட்டு வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த ராஜசேகரை சென்னையில் உள்ள தனியார் மாலில் வைத்து கைது செய்தனர். தங்கள் பணத்தை கவிதா மற்றும் சென்னையை சேர்ந்த மதிமந்திரம் என்ற இரண்டு பேரிடமும் ராஜசேகர் கொடுத்து வைத்திருப்பதாகவும் அவற்றை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வேலைக்காக தாய்லாந்து அழைத்துச்செல்லப்பட்ட 10 தமிழர்கள் ஆவணங்களின்றி மியான்மரில் கைது!
அடுத்த பிளான்...
தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் விசாரித்ததில் ராஜசேகர் IHFL பவர் ஸ்டேஷன் என கார் எலக்ட்ரான் சார்ஜ் ஸ்டேஷன் அமைக்கும் அடுத்த சதுரங்க வேட்டைக்கு தயாரானது தெரியவந்தது. சீனாவில் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சார்ஜ் இயந்திரத்தை வாங்கி 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதிலும் இவர் தனது கைவரிசையை காட்டி உள்ளார். அதாவது சார்ஜ் ஸ்டேஷன் அமைக்கும் நபர்களுக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் தங்கள் நிறுவனம் மூலம் கொடுக்கப்படும் , சார்ஜ் செய்ய ஆட்கள் வந்தாலும் வரவில்லை என்றாலும் பிரச்சினை இல்லை. காஷ்மீரில் சார்ஜ் செய்தால் கூட உங்களுக்கு இங்கு பணம் வழங்குவோம் என ஏகத்திற்கும் தெரிவித்துள்ளார். இதற்கு ஆட்கள் பிடித்து தரும் புரோக்கருக்கு 1 லட்சம் என கொடுத்து வந்துள்ளார். தான் ஏமாற்றி சேர்ந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி சிறுவனை கடத்தி சென்ற கட்டுமான கான்ட்ராக்டர் ராகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இந்த ராஜசேகரால் தான் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜசேகரிடம் பணத்தை கொடுத்துவிட்டு தனது தங்கை திருமணத்திற்கு பணம் இல்லாமல் பணத்தை கேட்டு வந்துள்ளார். ராஜசேகர், சிவகுமார், கவிதா என மூவரும் சேர்ந்து ஏமாற்றியதால் குழந்தையை கடத்தி சென்றுள்ளார். பின்னர் பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheating case, Chennai, Fraud, Tirupur