10 ரூபாய் நாணயத்தை நடத்துனர்கள் வாங்ககூடாது! அறிக்கை வெளியிட்ட போக்குவரத்து மேலாளர் சஸ்பெண்ட்

10 ரூபாய் நாணயங்களை வாங்கக் கூடாது என்று உத்தரவு போட உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?' என்று சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளித்தார்கள். 

news18
Updated: June 25, 2019, 9:51 AM IST
10 ரூபாய் நாணயத்தை நடத்துனர்கள் வாங்ககூடாது! அறிக்கை வெளியிட்ட போக்குவரத்து மேலாளர் சஸ்பெண்ட்
10 ரூபாய் நாணயங்கள்
news18
Updated: June 25, 2019, 9:51 AM IST
பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களைத் தவிர்க்கச் சொல்லி, நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை 2 -ன் மண்டல மேலாளர் தனபால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அரசால், வெளியிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற வதந்தி அவ்வப்போது தமிழ்நாட்டில் பரவுவது வழக்கம். அதனால், 10 ரூபாய் நாயணங்களை வாங்க மாட்டோம் என்று பொதுமக்கள் கூறிய நிலையில், அந்த நாணயங்கள் செல்லும் என்று ஆர்.பி.ஐ விளக்கம் அளிக்கும் நிலை ஏற்பட்டது.

சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை


இந்தநிலையில், கடந்த 21-ம் தேதி, திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை இரண்டாவது மண்டலத்தில், 'பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களை முடிந்தவரை தவிர்க்கவும். தவறும்பட்சத்தில், வழித்தடத்தில் பணிகளுக்கு வழங்கவும். வசூல் தொகை செலுத்தும்போது, 10 ரூபாய் நாணயத்தைத் தவிர்க்குமாறு அனைத்து நடத்துநர்களுக்கும் இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது' என்று சுற்றறிக்கை ஒட்டப்பட்டிருக்கிறது.

இதை யாரோ ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, '10 ரூபாய் நாணயங்களை வாங்கக் கூடாது என்று உத்தரவு போட உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?' என்று சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய அந்த சுற்றறிக்கையை திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுக்கொண்டது.

இதுகுறித்து திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை 2-ன் மண்டல மேலாளர் தனபால், “வங்கியில் பணம் செலுத்தும்போது ஏற்படும் இடையூறுகளைத் தவிர்க்கவே அந்த சுற்றறிக்கை ஒட்டப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அது பொது மக்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்ததால், அந்த சுற்றறிக்கை திரும்பப்பெறப்பட்டது” என்று விளக்கம் கொடுத்திருந்தார்.

இருப்பினும், இதுதொடர்பான சர்ச்சை தொடர்ந்துகொண்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த சுற்றறிக்கையை வெளியிட்ட திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை 2-ன் மண்டல மேலாளர் தனபாலை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் அரசு போக்குவரத்துக் கழகத்தின் கோயம்புத்தூர் மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’10 ரூபாய் நாணயத்தை வாங்க வேண்டாம் என்ற சுற்றறிக்கையை நிர்வாகத்திடம் எந்த ஒப்புதலும் பெறாமல் தனிச்சையாகச் செயல்பட்டு, பொதுமக்களிடம் போக்குவரத்துக் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்ற வகையில் நடந்துகொண்டுள்ளார். அவர் வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்துசெய்யப்படுவதோடு, திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை 2-ன் மண்டல மேலாளர் தனபால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also see:

First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...