Home /News /tamil-nadu /

நூல் விலை வரலாறு காணாத உயர்வு : பின்னலாடை துறையினர் அதிர்ச்சி

நூல் விலை வரலாறு காணாத உயர்வு : பின்னலாடை துறையினர் அதிர்ச்சி

திருப்பூர் செய்திகள்

திருப்பூர் செய்திகள்

Tirupur News : தொடர் நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்து வருவதாகவும் இது தொடர்ந்தால் இந்திய ஆடை வர்த்தகம் அழிவை நோக்கி செல்லும் என வேதனை தெரிவித்தார்.

திருப்பூர் பின்னலாடை துறையின் மிக முக்கிய மூலப் பொருளாக உள்ள நூல் விலை இன்று ஒரே நாளில் 30 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 50 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக 350  ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நூல், தரம் வாரியாக 400 முதல் 420 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடுமையாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 150 முதல் 190 வரை விலை உயர்த்தப்பட்டு 300 முதல் 350 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் காரணமாக பின்னலாடை தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

இந்த சூழ்நிலையில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தொழில்துறையினர் மத்திய அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் கடந்த நவம்பர்  26ம் தேதி  கோரிக்கைகளை வலியுறுத்தி பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த 117 அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.  இந்த நிலையில் இந்திய பருத்தி கழகம் அனைத்து ரக நூல்களின் விலையில் கடந்த டிசம்பர் 10 ரூபாய் குறைத்தது.



நுாற்பாலைகளை பொருத்தவரை பஞ்சு விலையை அடிப்படையாக கொண்டு மாதம்தோறும் 1-ம் தேதி நுால் விலையை நிர்ணயிக்கின்றன. அவ்வகையில் கடந்த 2020 நவ., முதல் 2021 ஏப்., வரை தமிழக நுாற்பாலைகள் ஒசைரி நூல் விலையை உயர்த்தியது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக நுாற்பாலைகள் நுால் விலையை ஒரே சீராக தொடர்ந்தன.

இந்த நிலையில் கடந்த நவ. மாதத்தில் அனைத்து ரக நூல்களும் ரூ. 50 உயர்த்தப்பட்டிருப்பது தொழில்துறையினரை அதிர்ச்சியடை வைத்தது. கடந்த ஓராண்டில் ரூ. 150 ஏறியிருந்த நூல் விலை, நவ. மாதத்தில் தடாலடியாக அனைத்து ரகங்களுக்கும் ரூ. 50 ஏறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இன்று மீண்டும் நூல் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் அனைத்து நூல்களும் கிலோவுக்கு 400 முதல் 420 வரை விலை உயர்ந்துள்ளது. இதனால் பின்னலாடை துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



 

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறுகையில், தொடர் நூல் விலை உயர்வால் பின்னலாடை தொழில் பெரும் இடர்பாட்டில் சிக்கி உள்ளதாகவும், பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பருத்திக்கு வர்த்தகர்கள் விலை நிர்ணயம் செய்வதால் விவசாயிகளை கடந்து வர்த்தகர்களின் ஆதிக்கம் பெருகி விட்டதாகவும் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலை உயர்த்தப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் இது தொடர்பாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தொடர் நூல் விலை உயர்வு காரணமாக பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்து வருவதாகவும் இது தொடர்ந்தால் இந்திய ஆடை வர்த்தகம் அழிவை நோக்கி செல்லும் என வேதனை தெரிவித்தார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Tirupur

அடுத்த செய்தி