திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல்... 3 பேர் கைது
திருப்பூரில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்கள் பறிமுதல்... 3 பேர் கைது
யானை தந்தங்கள்
Tiruppur District : இவர்களுக்கு யானை தந்தம் வழங்கியது யார் ? இறந்த யானையில் இருந்து தந்தங்கள் வெட்டப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர்.
திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த அவிநாசியப்பன் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பர்கள் முருகன், வீரப்பன் ஆகியோர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் . இவர்களிடம் கம்பம் பகுதியில் இருந்த நபர் ஒருவர் அறிமுகமாகி தன்னிடம் யானைத் தந்தங்கள் இருப்பதாகவும் அதை விற்று தருமாறு கூறி நான்கு நாட்களுக்கு முன்பு பேருந்து மூலமாக அவிநாசியப்பனுக்கு அனுப்பி உள்ளனர்.
அதைப் பெற்றுக்கொண்ட அவிநாசியப்பன் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து விற்பதற்கு முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட வனச்சரக அலுவலர் செந்தில்குமாருக்கு திருப்பூரில் யானை தந்தங்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் தனிப்படை அமைத்து வன அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்த போது அவிநாசியப்பனிடம் யானை தந்தங்கள் இருப்பதாக சந்தேகம் அடைந்தனர். அதை உறுதிப்படுத்த வனச்சரக அலுவலர் செந்தில்குமார் யானை தந்தங்களை வாங்குவது போல அவிநாசியப்பனிடம் பேசி அதனை காட்ட கூறியுள்ளார்.
80 லட்சம் வரை விலை நிர்ணயித்த பின்பு செந்தில்குமாருக்கு அவிநாசியப்பன் யானை தந்தங்களை காட்டியுள்ளார். அப்போது அவனிடம் யானைத் தந்தங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவிநாசியப்பர் மற்றும் அவரது நண்பர்கள் வீரப்பன் முருகன் ஆகியோரை கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 4 அடி உயரமுள்ள 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்களையும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுக்கு யானை தந்தம் வழங்கியது யார் ? இறந்த யானையில் இருந்து தந்தங்கள் வெட்டப்பட்டதா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் : பாலாஜிபாஸ்கர், திருப்பூர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.