ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட பனியன் தொழிலாளர்கள் 2 பேர் கைது!

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட பனியன் தொழிலாளர்கள் 2 பேர் கைது!

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு பைக்கில் தொடர்  சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட பனியன் தொழிலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் தனது மனைவி மாலதியுடன்  இருசக்கர வாகனத்தில் கடந்த ஜுலை மாதம் 18ம் தேதி பங்களாஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மாலதி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.

மாலதி சங்கிலியை இறுக பிடித்து கொண்டதால் 2 பவுன் செயின் மட்டும் அறுந்து அவர் கையில் நின்றது. மீதி 2 பவுன் செயினை கொள்ளையர்கள் திருடி சென்றனர். இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் போயம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (23), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி(23) என்ற இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 2 பவுன் தங்க சங்கிலி பறிமுதல் செய்தனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளது.  பாலகிருஷ்ணன், அலெக்ஸ்பாண்டி, உதயமூர்த்தி என்ற மூவருக்கும் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு கஞ்சா, போதை ஊசி பழக்கம் இருந்துள்ளது.

Also read: தந்தையின் கண்முன்னே கோயில் குளத்தில் 2 குழந்தைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்!!

மேலும் விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்ட ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைபட்ட மூவரும் இணைந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். அதன்படி உதயமூர்த்தி இருசக்கர வாகனங்களை திருடி கொடுத்தால் அதன் மூலம் பாலகிருஷ்ணன், அலெக்ஸ்பாண்டி இருவரும் இணைந்து சாலையில் செல்லும் பெண்களின் நகைகளை பறித்து அதன் மூலம் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சித்தரசன்கோட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலியையும் இவர்கள் மூவரும் சேர்ந்து பறித்துக் கொண்டு மூவரும் தப்பி சென்ற போது பின்னால் காரில் வந்தவர் இவர்களை துரத்தி சென்று தனது செல்போனில் வீடியோ எடுத்தார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் அந்த சம்பவம் தொடர்பான கொள்ளையர்கள் இவர்கள் தான் என உறுதியானது. இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட போலீசார் திருப்பூர் வந்து சிக்கிய கொள்ளையர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூன்றாவது நபரான உதயமூர்த்தி ஏற்கனவே இருசக்கர வாகன திருட்டு வழக்கில் அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தவறான வழியில் பொருள் ஈட்ட நினைக்கும் இளைஞர்கள் சிறையில் தான் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்பதை இவர்கள் நிலை அனைவருக்கும் உணர்த்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Esakki Raja
First published: