Budget Expectation | தனி ஏற்றுமதி கொள்கை,பின்னலாடை தொழிலாளர்களுக்கு குடியிருப்பு - தமிழக பட்ஜெட்டில் தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

பின்னலாடை நிறுவனங்கள்

பின்னலாடை உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் தயாரிப்புக்கும், பட்டன், ஜிப் போன்ற மூலப்பொருள் உற்பத்திக்கும் தனி பூங்காக்களை அமைத்துக் கொடுக்க வேண்டும்

  • Share this:
    இந்தியாவின் ஏற்றுமதியில் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மூலம் 10 சதவீத பங்களிப்பை தரும் தமிழகத்திற்கு தனி ஏற்றுமதி கொள்கை வகுக்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியின் தலைநகரமாக விளங்கும் திருப்பூரில் ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான உற்பத்தி பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. உள்நாட்டு வர்த்தகம் 26 ஆயிரம் கோடி ரூபாய் என மொத்தம் 52 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வணிகம் நடைபெறுகிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 10 சதவீதமாக உள்ளது.

    டாலர் நகரம் என போற்றப்படும் திருப்பூரில் பின்னலாடை தொழில் செழிக்கவும், வேலை வாய்ப்பு பெருகவும் தேவையான முக்கிய அறிவிப்புகள் வரும் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டும் என்று தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அவற்றில் தமிழகத்திற்கு தனி ஏற்றுமதி கொள்கை என்பது பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது. தொழில் துறையினரின் இந்த நீண்ட கால கோரிக்கை நிறைவேறினால் திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியும், வேலைவாய்ப்பும் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும் கூறுகின்றனர்.

    பின்னலாடை உற்பத்திக்கு தேவையான இயந்திரங்கள் தயாரிப்புக்கும், பட்டன், ஜிப் போன்ற மூலப்பொருள் உற்பத்திக்கும் தனி பூங்காக்களை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இதன்மூலம் மூலப்பொருட்களின் செலவுகள் குறைந்து உற்பத்தி அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் திருப்பூர் நகரின் உயிர்நாடியாக திகழும் பின்னலாடை தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதியை ஏற்படுத்தி தருவது குறித்து வரும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

    அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுடன் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில், வர்த்தகர்கள் திருப்பூர் வந்து செல்வதற்கு வசதியாக கோவை விமான நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இ.எஸ்.ஐ மூலம் அனைத்து தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்யும் முதல் நிதிநிலை அறிக்கையில், தங்களது பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாக கூறுகின்றனர் பின்னலாடை உற்பத்தியாளர்கள்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: