கேரளா சார்பில் வந்த அழைப்பை நிராகரித்த தமிழகத்து வாள்வீச்சு வீராங்கனை.. விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்துவரும் அவலம்!

மைதிலி

தாய், தந்தைக்கு உதவியாக விசைத்தறி கூடத்தில் வேலை செய்து அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறார் மைதிலி

  • Share this:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சுக்கம்பாளையம் கிராம ஊராட்சி மேற்கு ராசாகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. விசைத்தறி தொழிலாளியான இவர் தனது மனைவி லட்சுமி மற்றும் மைதிலி (24) என்ற ஒரு மகளுடன் குடியிருந்து வருகின்றனர். மாரிமுத்து, லட்சுமி தம்பதியினரின் ஒரே மகளான மைதிலி  திருசெங்கோட்டில் உள்ள விவேகானந்தா பெண்கள் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து பட்டம் பெற்றுள்ளார்.மேலும் இவர் சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியர் படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

மாணவி மைதிலிக்கு சிறுவயது முதலே படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் ஆர்வம் இருந்ததன் காரணமாக தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை செய்திகளில் வரும் விளையாட்டு சம்பந்தப்பட்ட செய்திகளை சேகரித்து வந்துள்ளார். இதில் ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு என்ற பென்சிங் விளையாட்டை தேர்வு செய்து நாமக்கல் எஸ்பிஏடி பள்ளியில் படித்தபோது அங்குள்ள உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி என்பவரிடம் வாள்வீச்சு குறித்து முறையான பயிற்சியை கற்றுத் தேர்ந்து மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான பென்சிங் என்கிற வாள்வீச்சு போட்டிகளில் கலந்துகொண்டு பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முதலிடத்தை பிடித்து பரிசு கோப்பைகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் குவித்து வைத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மைதிலி சென்னை வேளச்சேரியில் இயங்கி வரும் தத்வா என்ற தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாக தற்காலிக பணியிடம் கிடைத்து குடும்பச் சூழல் காரணமாக அங்கு பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தற்போதைய முழு ஊரடங்கு காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதால் வேலையை இழந்த வீராங்கனை மைதிலி பல்லடத்தில் விசைத்தறி கூடத்தில் கருவிகளை இயக்கி கூலிவேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். குடும்ப வறுமை சூழலால் பல்வேறு சாதனைப் பதகங்கள்,பரிசுப் பொருட்கள்,பாராட்டுச் சான்றிதழ்களை குவித்து வைத்திருந்தும் வருவாய்க்கு வழி இன்றி தந்தைக்கு உதவியாக விசைத்தறி கூடத்தில் தரிகளை இயக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மிகுந்த மன வேதனையுடன் கூறுகிறார்.

பெற்றோருடன் மைதிலி


பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான மைதிலி கூறுகையில் கடந்த 2009ஆம் ஆண்டு நாமக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான வாள்வீச்சு போட்டியில் கலந்துகொண்டு முதலிடத்தை பெற்றதாகவும், பின்னர் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த தேசிய அளவிலான மகளிர் வாள்வீச்சு போட்டியில் கலந்துகொண்டு தனிநபர் போட்டியில் இரண்டாம் இடமும், குழு அளவில் முதலிடத்தையும் தனதாக்கிக் கொண்டுள்ளார். பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான வாள்வீச்சு போட்டியில் மூன்றாம் இடத்தையும் பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்ற வாள்வீச்சு போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Also Read:    ரிக்கி பாண்டிங்கின் இந்த உலக சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?

மேலும் கடந்த 2014,15,16 ஆம் ஆண்டுகளில் முறையே மகாராஷ்டிரா சத்ரபதி சிவாஜி ஸ்டேடியத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வாள்வீச்சு போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கொச்சினில் நடைபெற்ற தேசிய அளவிலான 8 அணிகள் பங்கேற்ற வாள்வீச்சு போட்டியில் கலந்துகொண்டு ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளார். அதே ஆண்டு ஒடிசா மாநிலம் கால்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று குழு மற்றும் தனிநபர் போட்டிகளில் பங்கேற்று மூன்றாம் இடத்தை பிடித்து சாதனைக்கு மேல் சாதனை புரிந்துள்ளார்.

பல்லடத்தில் இருந்து சாதாரண கிராமத்தில் ஒரு விசைத்தறி தொழிலாளி குடும்பத்தில் மகளாகப் பிறந்து மிகவும் வித்தியாசமான வாள்வீச்சு விளையாட்டை தேர்வு செய்து தேசிய அளவிலும்,மாவட்ட அளவிலும், மாநிலங்கள் அளவிலும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி சாதனைகளையும் படைத்து பாராட்டு சான்றிதழ்களையும், பரிசு கோப்பைகளையும், பதக்கங்களையும் குவித்துள்ள வீராங்கனை மைதிலி தனக்கு கேரளா மாநிலத்துக்காக விளையாட வந்த அழைப்புகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு தமிழ் நாட்டிற்காக மட்டுமே விளையாடுவேன் என்றும் கிடைத்த வாய்ப்பை மறுத்து கிடைத்த வருவாயையும் புறந்தள்ளி உள்ளார்.

வாள் வீச்சு வீராங்கனை மைதிலியின் தந்தை மாரிமுத்து மற்றும் தாய் லட்சுமி கூறுகையில் தங்களது மகள் படிப்பில் எவ்வாறு நன்றாக படித்தாரோ அதேபோல் விளையாட்டில் இருந்த ஆர்வம் காரணமாக இந்த வாள்வீச்சு போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைத்து பெருமைகள் பல சேர்த்த போதும் இதுவரை நிலத்தை அடகு வைத்தும், நகைகளை அடகு வைத்தும் பலரிடமும் கடனை வாங்கியே பயிற்சிகளுக்கும் போட்டிகளுக்கும் அனுப்பி வைத்தோம். இதில் ஏற்பட்ட கடன்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை என்றும் அரசு இதை கவனத்தில் கொண்டு வேலை வாய்ப்பை கொடுத்தால் மட்டுமே கடனிலிருந்து மீண்டு நாட்டுக்காக மேலும் பல வெற்றிகளை குவிக்க தங்களது செல்ல மகளை அனுப்பி வைக்க முடியும் என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மைதிலி கூறுகையில் சிறிய கிராமத்தில் பிறந்த தன்னிடம் உள்ள திறமைகளை வெளிக்காட்ட லட்சக்கணக்கில் செலவு செய்ததன் காரணமாகவும் அரசு உதவித்தொகை வழங்கி ஊக்கம் கொடுத்தால் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு தங்கம் வென்று இந்தியாவுக்கும்,பிறந்த ஊருக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்ப்பதே தனது லட்சியம் என்றும் அவர் கூறினார்.

தற்போது தாய்,தந்தைக்கு உதவியாக விசைத்தறி கூடத்தில் வேலை செய்து அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே தமிழக அரசு இனியும் காலதாமதபடுத்தாமல் உடனடியாக சாதனைப்பெண் மைதிலிக்கு உதவித்தொகையையும் போதிய பயிற்சி வசதிகளையும் கொடுத்து உதவினால் அவர் மேலும் பல வெற்றிகளை குவித்து தமிழகத்திற்கும் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்ப்பார் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
Published by:Arun
First published: