Home /News /tamil-nadu /

மின்சாரம், சிசிடிவி கேமரா துண்டிப்பு... நகைக்கடை கொள்ளையில் வடமாநில கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

மின்சாரம், சிசிடிவி கேமரா துண்டிப்பு... நகைக்கடை கொள்ளையில் வடமாநில கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?

வட மாநில கொள்ளையர்கள்

வட மாநில கொள்ளையர்கள்

சென்னையில் கொள்ளையர்கள் இறங்குவதையும் அங்கிருந்து பீகார் செல்லும் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்வதையும் உறுதி செய்தனர். கொள்ளையர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டால் அவர்களை பிடிப்பது மிகவும் கடினம் என்பதால் அவர்களை ரயிலில் வைத்தே பிடிக்க வேண்டும் என போலீசார் திட்டமிட்டனர்.

மேலும் படிக்கவும் ...
    திருப்பூர் அடகு நகைக்கடையில் மின்சாரத்தை துண்டித்து 2 கோடி ஆபரணங்கள் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை மாஸ்க் மற்றும் தொப்பி மூலம் அடையாளம் கண்டு 32 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.

    திருப்பூர் யூனியன் மில் சாலையில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான நகை அடகு கடை உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இவர் அடகு கடை நடத்தி வருவதால் அவரிடம் பலரும் நகைகளை அடகு வைத்து வருகின்றனர். மேலும் நகை வியாபாரமும் அதே கடையில் இவர் செய்து வருகிறார். கடையில் பின்புறம் உள்ள வீட்டில் தங்கி வந்த இவர் கடைக்கும் வீட்டிற்கும் இடையே ஒரு வழியை வைத்து பயன்படுத்தி வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த வீட்டை காலி செய்து அருகே உள்ள மற்றுமொரு வீட்டிற்கு குடியேறினார். இதனால் அந்த வீட்டை பூட்டி வைத்ததுடன் வீட்டிற்கும் கடைக்கும் இடையே உள்ள கதவை நகைக்கடை உட்புறமாக பூட்டி வைத்தார். கடந்த 3ஆம் தேதி இரவு நகை கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்ற அவர் அடுத்தநாள் காலை வழக்கம்போல கடையை திறந்து பார்த்த பொழுது கடை உள்ளே இருந்த அனைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் விரைந்து சென்ற போலீசார் கடையின் பின்புறம் இருந்த வீட்டிற்கும் கடைக்குமான கதவு உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா ஒயர்களை துண்டித்து விட்டு கடைக்கு செல்லும் மின்சார பியூஸ் கேரியரையும் பிடுங்கி வைத்து விட்டு இருட்டில் டார்ச் லைட் அடித்து கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

    இதையும் படிங்க: திருப்பூரில் பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிவந்த அண்ணன் தம்பி- ஆம்னி வேனுடன் சிக்கினர்


    கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா வயர்களை துண்டித்த போதும் தனித்து இயங்கும் சிசிடிவி கேமரா ஒன்றையும் கடையில் ஜெயக்குமார் பொருத்தி இருந்தார் அந்த காட்சிகளை ஆய்வு செய்த பொழுது கொள்ளையர்களில் இருவர் மட்டும் கடைக்கு உள்ளே கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் டார்ச் லைட் அடித்து திருடும் பொழுது அதில் ஒருவன் தலையில் தொப்பி அணிந்த படி மாஸ்க் அணிந்து இருந்ததை போலீசார் கண்டனர்.

    உடனடியாக நகை கடையின் சுற்றுப்புறத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 4 பேர் கும்பலாக கொள்ளையடிக்க சென்றதும் இரண்டு பேர் வெளியே காவலுக்கு நின்ற நிலையில் இரண்டு பேர் மட்டும் உள்ளே சென்று கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.   தொப்பி மற்றும் மாஸ்க் அடையாளத்தை கொண்டு கொள்ளையர்கள் சென்ற பகுதிகளில் இருந்த அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்ததில் திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சென்ற கொள்ளையர்கள் அங்கே தங்களது உடைகளை மாற்றிக் கொண்டு சென்னைக்கு ரயில் மூலம் புறப்பட்டது தெரியவந்தது.

    மேலும் படிக்க: பல்லாவரம் அருகே போலீசாரிடம் தப்ப முயன்ற ரவுடிகள் தவறி விழுந்து கை கால் முறிவு


    கொள்ளையர்களின் முழு அடையாளத்தையும் திருப்பூர் ரயில் நிலைய சிசிடிவி காட்சிகளின் மூலம் பெற்ற போலீசார். தொடர்ந்து சென்னையில் கொள்ளையர்கள் இறங்குவதையும் அங்கிருந்து பீகார் செல்லும் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்வதையும் உறுதி செய்தனர். கொள்ளையர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டால் அவர்களை பிடிப்பது மிகவும் கடினம் என்பதால் அவர்களை ரயிலில் வைத்தே பிடிக்க வேண்டும் என போலீசார் திட்டமிட்டனர்.

    ரயில்வே போலீசார் உதவியுடன் பாகமதி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்லும் கொள்ளையர்களை பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.  அதன்படி மகாராஷ்டிரா மாநிலம் பல்லார்ஷா ரயில் நிலையத்தில் நின்ற ரயிலில் ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் நவீன் பிரதாப் சிங் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கொள்ளையர்கள் 4 பேரும் கொள்ளை அடித்த தங்கம் வெள்ளி மற்றும் பணத்தை மூட்டையாக கட்டி வைத்துக்கொண்டு ரயிலில் சாவகாசமாக பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

    உடனடியாக அவர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 3.25 கிலோ தங்க நகைகள், 28 கிலோ வெள்ளி பொருட்கள், 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் என கொள்ளையடித்த பொருட்களை முழுவதும்  பறிமுதல் செய்தனர். விசாரணையில் நான்கு பேரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த மகதப் ஆலம்(37), பத்ருல்(20), முகமது சுபான்(30), திலக்ஸ்(20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து மகாராஷ்டிரா விரைந்த தனிப்படை போலீசார் சந்தர்பூர் நீதிமன்றத்தில் நால்வரையும் ஆஜர்படுத்தி திருப்பூருக்கு அழைத்து வந்தனர்.

    இதையும் படிக்க: வணிகர்களிடம் வசூல் வேட்டை.. பேப்பரை கிழித்தால் மாட்டிக்கொண்ட போலி போலீஸ் - கோவில்பட்டி சம்பவம்


    இதில் மகதப்ஆலம் குற்றப்பின்னணி உடையவர் என்பதும் நகைக்கடை கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. மேலும் பிடிபட்ட நால்வருக்கும் வேறு ஏதாவது வழக்கில் தொடர்பு உள்ளதா? எனவும் வேறு நபர்கள் கொள்ளைக்கு உடந்தையாக செயல்பட்டனரா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை நடைபெற்ற 32 மணி நேரத்தில் ரயிலில் வைத்தே கொள்ளையர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்கு திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு பாராட்டுக்களை தெரிவித்தார்.

    மேலும் திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் குறித்த தகவல்களை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  12 கோடி மதிப்பீட்டில்  1200 சிசிடிவி கேமராக்களை 442 இடங்களில் பொருத்த உள்ளதாகவும் அதன் பின்னர் குற்ற சம்பவங்கள் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்

    செய்தியாளர்: பாலாஜி - திருப்பூர்
    Published by:Murugesh M
    First published:

    Tags: Gold Theft, Theft, Tiruppur

    அடுத்த செய்தி