திருப்பூரில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த ஆக்டிவ் கார்பன் தயாரிக்கும் தேங்காய் சிரட்டை எரிக்கும் ஆலைகள் இடித்து அகற்றப்பட்டன.
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் அருகே உள்ள அப்பிலியப்பட்டி, பூளவாடி கிராமங்களில் காற்று மற்றும் நீரினை மாசுபடுத்தும் விதமாக தேங்காய் சிரட்டை சுடும் ஆலைகள் அரசு அனுமதி இன்றி செயல்படுவதால், அதன் துகள்கள் காற்றில் பரவி மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் காற்று மற்றும் நீர் நிலைகளில் படிந்து விவசாயம் பாழ்பட்டு வருவதாகவும், சட்ட விரோதமாக செயல்படும் ஆலைகளை சீல் வைக்க கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர்ச்சியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்துறையினரிடம் புகார் மனு அளித்து வந்தனர்.
இந்நிலையில் சட்டவிரோதமாக இயங்கிவரும் தேங்காய் சிரட்டை கரி தொட்டி ஆலைகளை நிரந்தரமாக இடித்து அகற்றும் வரை உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். இதனை அடுத்து வட்டாட்சியர் தலைமையில் உடுமலைப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் குடிமங்கலம் காவல் ஆய்வாளர் மற்றும் திருப்பூர் தெற்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் ஆகியோர் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் கரிதொட்டி ஆலைகள் குறித்து விவசாயிகள் குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வினீத், பிரச்சனைக்குரிய இரண்டு கரித்தொட்டி ஆலைகளையும் உடனடியாக இடிக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் மீதமுள்ள 4 ஆலைகளையும் இம்மாத இறுதிக்குள் அகற்றவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
இதையும் படிங்க: நூல் விலை வரலாறு காணாத உயர்வு : பின்னலாடை துறையினர் அதிர்ச்சி
இதனை தொடர்ந்து இன்று குடிமங்கலம் அருகே பூளவாடி மற்றும் அப்பிலியப்பட்டி கிராமங்களில் உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த இரண்டு தேங்காய் கரித்தொட்டி ஆலைகளில் இருந்த நிலத்தடி கரிசுடும் அமைப்புகள், தண்ணீர் தொட்டிகள் உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.