Home /News /tamil-nadu /

பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்படும் மண்ணில் முறைகேடு : ஒப்பந்ததாரர்கள் மோசடி

பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்படும் மண்ணில் முறைகேடு : ஒப்பந்ததாரர்கள் மோசடி

திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் பாதாள சாக்கடை பணிக்கு தோண்டப்படும் மண்ணில் முறைகேடு நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகளிலும் பாதாளச்சாக்கடை திட்டம் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை குழாய் அமைக்க தோண்டப்படும் குழியில் இருந்து அள்ளப்படும் மண் அதே பகுதியில் அப்படியே விடப்பட வேண்டும். மீதமுள்ள இந்த மண் சாலைப் பணியின் போது நிரவி சாலை அமைக்கப்படும். ஆனால் குழாய் பதிக்க ஒப்பந்தம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் தோண்டப்பட்ட இடத்தில் குழாய் பதிப்பதால் ஏற்படும் உபரி மண்ணை அரசுக்கு தெரியாமல் முறைகேடாக விற்பனை செய்து பல கோடி ரூபாய் மோசடி செய்து வருவது தெரியவந்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி 8வது வார்டு கங்கா நகர் பகுதியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்க தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் தோண்டப்பட்ட மண், அருகே கட்டப்பட்டு வரும் தனியார் கட்டிடத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை நேரில் கண்ட பொதுமக்கள் பாதாள சாக்கடை குழாய் அமைக்க தோண்டப்பட்ட மண்ணை தனியார் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் எதற்காக கொட்டினீர்கள் என கேட்டு லாரி டிரைவரை சிறை பிடித்துள்ளனர்.



ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியாது. ஒப்பந்ததாரர் சொல்லும் இடத்தில் கொட்டுவது மட்டுமே தன் வேலை என லாரியுடன் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போதும் முறையான பதில் இல்லாமல், மண்ணை விற்பனை செய்ய கூடாது.



இது பற்றி தங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை என மழுப்பலாகவே அதிகாரிகள் பேசி வருகின்றனர். ஒரு லோடு மண் 3500 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. மாநகராட்சி முழுவதும் 60 வார்டுகளில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு நாளைக்கு 30 முதல் 40 லோடு மண் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

ALSO READ |  ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிய செயலாளர் நியமனம் - தமிழக அரசு உத்தரவு
 கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பல கோடி ரூபாய்க்கு மண் விற்பனை மூலம் மட்டும் ஒப்பந்ததாரர்கள் மோசடி செய்யதுள்ளது தெரிய வந்துள்ளது.  பாதாள சாக்கடை குழாய் அமைக்க ஒப்பந்தம் பெற்று உபரி மண்ணை விற்பனை செய்து பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி வரும் ஒப்பந்ததாரர்கள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Tiruppur

அடுத்த செய்தி