ரைஸ்மில் ஓனர் மகனை காருடன் கடத்திய கும்பல்.. 6 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி வேட்டை

மாதிரி படம்

திண்டுக்கல் சாலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது அந்த கும்பல் மதுரைக்கு தப்பியது தெரியவந்தது.

  • Share this:
திருப்பூர் அருகே அரிசி ஆலை உரிமையாளர் மகனை கடத்திய கும்பல், 3 கோடி ரூபாயை பெற்றுள்ளனர். தப்பியோடிய கும்பலில் இருந்து ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

காங்கேயத்தை அடுத்த காடையூரைச் சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி, அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவரது மகனான 22 வயது சிவபிரதீப் மற்றும் அவரது ஓட்டுநர் சதாம், அரிசி ஆலைக்கு சென்றுவிட்டு காரில் திரும்பியபோது வீரசோழபுரம் சாலையில், மற்றொரு காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் கடத்தியது. இதன்பிறகு ஈஸ்வரமூர்த்தியிடம் 3 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும், இல்லையென்றால் சிவபிரதீப்பை கொலை செய்து விடுவோம் எனவும் அந்த கும்பல் மிரட்டியுள்ளது.

இதனால் பயந்துபோன ஈஸ்வரமூர்த்தி, 3 கோடி ரூபாயை திரட்டி திண்டுக்கல் புறவழிச்சாலையில் ஆள்கடத்தல் கும்பலிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து சிவபிரதீப் மற்றும் ஓட்டுநர் சதாமை விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பியோடியது. இது தொடர்பாக காங்கேயம் காவல்நிலையத்தில் சிவபிரதீப் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் எட்டு தனிப்படைகளை அமைத்தனர்.

Also Read : கொரோனா ஊசி போட வந்திருக்கேன் ஆதார் கார்டு எடுங்க - சிறுவர்களை ஏமாற்றி பீரோவை உடைத்து கொள்ளையடித்த மர்மநபர்


திண்டுக்கல் சாலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது அந்த கும்பல் மதுரைக்கு தப்பியது தெரியவந்தது. உடனடியாக அங்கு விரைந்தபோலீசார், தனிவீட்டில் பதுங்கியிருந்த மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கோடியே 69 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கிருஷ்ணகிரியில் பதுங்கியிருந்த ஓட்டுநர் பசீரிடமும் 20 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிவபிரதீப் அரிசி ஆலையில் பணிபுரிந்த சக்திவேல் மற்றும் பாலாஜி ஆகியோர் இந்த சம்பவத்திற்கு திட்டம் தீட்டியது தெரியவந்தது. ஆள்கடத்தல் தொடர்பாக மொத்தம் ஐந்து பேரை கைது செய்த போலீசார், இருவரை தேடி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Vijay R
First published: