திருப்பூரில் கொரோனா பாதித்தவர்களுக்கு ஆக்சிஜன் பந்தல் மூலம் தற்காலிக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இல்லாமல் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு தற்காலிக சிகிச்சையளிக்கும் விதமாக ஆக்சிஜன் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் தினசரி கொரோனா பாதிப்பு 600ஐ கடந்துள்ளது.
மாவட்டத்தில் 800 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில் அனைத்தும் நிரம்பி வழிகின்றன, புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் சிரமப்படும் நிலை உள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாமல் நோயாளிகளும், உறவினர்களும் பெரும் அவதியடைகிறார்கள்.
இந்நிலையில், ஆக்சிஜன் இன்றி அவதிப்படுபவர்களுக்கு உதவிடும் வகையில் திருப்பூர் நற்றிணை அறக்கட்டளையினர் சார்பில் ஆக்சிஜன் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் காட்டன் மில் ரோட்டில் உள்ள சக்தி மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக ஆக்சிஜன் உதவி படுக்கை அமைத்து, ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் அல்லாடுபவர்களுக்கு அவசர தேவைக்காக ஆக்சிஜனை வழங்கி வருகின்றனர். தவிர எந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை காலியாகி உள்ளது என்ற விவரத்தை பெற்றுக் கொண்டு, ஆக்சிஜன் படுக்கை கிடைத்ததும் இங்கிருந்து செல்லலாம்.
இதுகுறித்து அறக்கட்டளை நிர்வாகிகளான டாக்டர்கள் சக்திவேல் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் கூறுகையில், இங்கு 10க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைத்து படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் ஒவ்வொரு நோயாளி இங்கு வரும்போதும் புதிய பி.பி.இ., கிட் விரிப்புகள், தலையணைகள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.
இந்த ஆக்சிஜன் பந்தலில் மருத்துவர் கட்டணம், மருத்துவ கட்டணம் எதுவும் கிடையாது எனவும் ஆக்சிஜனுக்கு மட்டும் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
நோயாளிகள் உயிர்காக்கும் பொருட்டு, சில மணிநேரத்துக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்ற சேவையையே குறிக்கோளாக கொண்டு இதை செய்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.