'அதிகாரிகள் மெத்தனம் ...25 நாட்களாக குடிநீர் இல்லை' - பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்
'அதிகாரிகள் மெத்தனம் ...25 நாட்களாக குடிநீர் இல்லை' - பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம்
பொதுமக்கள் சாலைமறியல்
Tiruppur District | எப்போது கேட்டாலும் மோட்டார் வேலை செய்யவில்லை என கூறுகின்றனர். கடந்த சில வருடங்களாக எங்களுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து பலமுறை கூறியுள்ளோம். எந்த நடவடிக்கையும் இல்லை என போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தாராபுரம் அடுத்த மணக்கடவு பகுதியில் 25 நாட்களாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் பழனி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மணக்கடவு பகுதியில் கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகிக்காததை கண்டித்தும், பல லட்சம் ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றை முறையாக பராமரிக்காமல் வீணாக்கி விட்டதாகவும் குற்றம் சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் தாராபுரம் பழனி பிரதான சாலையை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் இரண்டு மணி நேரமாக போராட்டம் நடைபெறற நிலையில் தாராபுரம் போலீசார் தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து கிராம மக்கள் தெரிவிக்கையில், இப்பகுதியில் ஒரு மாதமாக தண்ணீர் வரவில்லை. கலெக்டர் இதுவரை வந்து எட்டிக் கூட பார்க்கவில்லை. ஆற்றில் தண்ணீர் உள்ளது. ஆற்றில் தண்ணீர் இல்லை என்றால் கூட சொல்லலாம். குழந்தைகளை வைத்துக் கொண்டு மிகவும் சிரமப்படுகின்றோம். பக்கத்துக்கு ஊருக்கு கூட தண்ணீர் போகுது. எங்க ஊரு பெரிய ஊர். இதனை கேட்க யாரும் இல்லை.
எப்போது கேட்டாலும் மோட்டார் வேலை செய்யவில்லை என கூறுகின்றனர். அமராவதி ஆற்றில் இருந்து தான் எங்களுக்கு தண்ணீர் வரும். கடந்த சில வருடங்களாக எங்களுக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து பலமுறை கூறியுள்ளோம். எந்த நடவடிக்கையும் இல்லை. சாப்பாடு இல்லாமல் கூட இருக்க முடியும் தண்ணீர் இல்லாமல் எப்படி இருக்க முடியும் என வேதனையுடன் தெரிவித்தனர்.
செய்தியாளர் : பாலாஜி பாஸ்கர்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.