திருப்பூர் மாவட்டம் பாப்பாங்குளம் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் கடந்த 24-ம் தேதி தனது தோட்டத்தில் சோளப்பயிரை அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென அவரை தாக்கியது. மேலும், வரதராஜனுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த மாறன் என்பவரையும் தாக்கிவிட்டு தப்பியோடியது. இருவரையும் மீட்ட பொதுமக்கள் அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்ததுடன், அதை பிடிப்பதற்காக கூண்டு வைத்தனர். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டனர். இதனிடையே, ட்ரோன் கேமரா மூலம் சோள காட்டிற்குள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, பதுங்கியிருந்த சிறுத்தை, வன ஊழியர் ஒருவரை தாக்கியது. இதில் லேசான காயத்துடன் வன ஊழியர் தப்பினார். சிறுத்தை சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து வழித்தவறி ஊருக்குள் வந்திருக்கலாம் என வனத்துறை தெரிவித்தது.
Also Read: 4 வயது சிறுவன் முந்திரி தோப்பில் அடித்துக்கொலை - பண்ருட்டியில் பரபரப்பு
சிறுத்தையானது வனஊழியர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டி வந்தது. விவசாய நிலங்களில் சுற்றித்திரிந்த சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அங்கிருந்த நாயை வேட்டையாடியது. இதனையடுத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் புதரில் சிறுத்தை தென்பட்டது. அம்மாபாளையம் குடியிருப்பு பகுதிகளுக்கு நடுவே உள்ள புதரில் சிறுத்தை பதுங்கி இருப்பதால் குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் தடுக்க சுற்றி வலை விரித்து மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்து கண்காணித்து வந்தனர். ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் மயக்க மருந்து செலுத்தி பிடிக்க துப்பாக்கியுடன் புதரில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த சிறுத்தை வேட்டை தடுப்பு காவலரை தாக்கியது.
மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தையை பிடிக்கும் பணியில் வேட்டை தடுப்பு காவலர்கள் வனத்துறையினர் என 60க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டனர்.. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 3 மருத்துவக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் என 80க்கும் மேற்பட்டோர் சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுமக்களை சேரவிடாமல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Also Read: காதலியுடன் இளைஞர் மாயம்.. தாயை கட்டிவைத்து அடித்த கொடூரம்
இரண்டு முறை மருத்துவக் குழுவினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை வைத்து சுட்டனர். சிறுத்தைக்கு மருத்துவர் விஜயராகவன் மயக்க ஊசி செலுத்தினார். இதனையடுத்து சிறுத்தை மயக்கமடையத் தொடங்கியது.
திருப்பூரில் பிடிபட்ட சிறுத்தை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் விடுக்கப்படும் என தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார்நீரஜ் கூறினார். கோவை குனியமுத்தூர் பகுதியில் பிடிக்கப்பட்ட சிறுத்தை விடுவிக்கப்பட்ட டாப்சிலிப் பகுதியில் இருந்த 20 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது பிடிபட்ட சிறுத்தை விடுவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தைக்கு டி.என்.ஏ உட்பட பரிசோதனைகள் நடத்தப்ட்ட பின்னர் ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் விடுவிக்கப்படும் எனத் தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Forest, Forest Department, Leopard, Tirupur