‘கடைசியா ஒருதடவை முகத்தை கூட பார்க்க முடியல..’ - கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை மாற்றிகொடுத்ததால் உறவினர்கள் அதிர்ச்சி

திருப்பூர்

மருத்துவ மனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்த உடலை இறுதி மரியாதை செய்ய திறந்து பார்த்த போது பாலசுப்பிரமணியம் உடலுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

  • Share this:
திருப்பூரில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த நபரின் உடலை மாற்றி கொடுத்ததால் உறவினர்கள் அதிர்ச்சி. விசாரணையில் முன்னதாகவே வேறு நபர்கள் உடலை எரியூட்டியதால் இறுதி சடங்கு செய்ய முடியாமல் உறவினர்கள் ஏமாற்றமடைந்தனர்.

திருப்பூர் வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (83) என்பவர் கொரோனா பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் உயிரிழந்ததை உறவினர்கள் நேரில் பார்த்து உறுதிபடுத்திய நிலையில் உடலை நேரடியாக மின்மயானத்திற்கு கொண்டு வருவதாக அரசு மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இறுதி மரியாதை மற்றும் சடங்குகள் செய்ய உறவினர்கள் ஆத்துப்பாளையம் மின் மயானத்தில் காத்திருந்தனர்.

மருத்துவ மனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்த உடலை இறுதி மரியாதை செய்ய திறந்து பார்த்த போது பாலசுப்பிரமணியம் உடலுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பாலசுப்பிரமணியம் உடல் இது அல்ல என தெரிந்ததும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும் பதட்டமடைந்து மருத்துவமனை ஊழியர்களிடம் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது.

சுமார் ஒரு மணி நேர விசாரணைக்குப் பிறகு ஆத்துப்பாளையம் மின் மயானத்திற்கு அனுப்ப வேண்டிய பாலசுப்பிரமணியம் உடலை திருப்பூர் தெற்கு மின் மயானத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது. அங்கு சென்று பார்த்த போது உடலை பெற்ற அவர்கள் முகத்தை பார்க்காமல் எரித்ததும் தெரியவந்தது.  இதனால் பாலசுப்பிரமணியம் உடலுக்கு இறுதி சடங்கு செய்ய முடியாமல் உறவினர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையை மட்டுமே பொதுமக்கள் நம்பி உள்ள நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் சிலரின் அலட்சியமான செயல்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும்  கொரோனாவால் உயிரிந்த நபர்களின் உடல்கள் மாற்றி கொடுக்கப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: