திருப்பூரில் கொரோனா பாதித்து அடுத்தடுத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி- தகவல் அறிந்து அதிர்ச்சியில் தாயும் பலி

மாதிரி படம்

திருப்பூரில் கொரோனா பாதிப்பால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். அதைக் கேட்டு தாயும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

  • Share this:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அடுத்த வெள்ளிரவெளி பகுதியை சேர்ந்த 42 வயதான கூலித் தொழிலாளி சமீபத்தில் திருமணத்திற்கு சென்றுவந்தார். அதனையடுத்து, அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா பாதிக்கப்பட்ட அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கடந்த 9 ந் தேதி உயிரிழந்தார். அதேபோல் 35 வயதான அவரது மனைவியும் கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரும் கடந்த 16 ஆம் தேதி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, உயிரிழந்த கூலித் தொழிலாளியின் அண்ணன் 47 வயதுடையவரும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்று 19-ம் தேதி உயிரிழந்தார். மற்றொரு சகோதரருமான 49 வயதுடையவரும் சிகிச்சை பலனின்றி 20-ம் தேதி உயிரிழந்தார். மற்றொரு சகோதரர் 40 வயதுடையவர் அவரும் கொரோனா பாதித்து சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் 24 ந் தேதி உயிரிழந்தார்.

தொடர்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தகவல் தாயார் பாப்பாளுக்கு (70) தெரிவிக்கப்படாமல் இருந்தது. தன்னை காண மகன்களும், மருமகளும் வராததால் தனது உறவினர்களிடம் அவர்கள் ஏன் வரவில்லை என கேட்டுள்ளார். அப்போது 5 பேரும் கொரோனா தொற்றால் இறந்த தகவலானது பாப்பாளுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதனால், அதிர்ச்சியிலும் துக்கத்திலும் இருந்தஅவர் நேற்று இரவு உயிரிழந்தார். ஒரே குடும்பத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: