Home /News /tamil-nadu /

தந்தையின் கடனுக்காக மகனின் சேமிப்பு கணக்கு முடக்கம் - மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் விவசாயி உயிரிழந்த பரிதாபம்

தந்தையின் கடனுக்காக மகனின் சேமிப்பு கணக்கு முடக்கம் - மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் விவசாயி உயிரிழந்த பரிதாபம்

விவசாயி குடும்பத்தினர்

விவசாயி குடும்பத்தினர்

வங்கி தரப்பில் உங்கள் தந்தை பெற்ற பயிர்கடனை செலுத்தினால் தான் உங்களின் சேமிப்பு கணக்கு முடக்கத்தை நீக்க முடியும் என பதில் கொடுத்துள்ளனர்.

பல்லடம் அருகே தந்தை வாங்கிய விவசாய வங்கி கடனுக்கு மகனின் சேமிப்பு கணக்கு  முடக்கப்பட்டதால் அவரின் மருத்துவ சிகிச்சைக்கு சிறிது சிறிதாக சேர்த்து பணத்தை எடுக்க முடியாமல் விவசாயி  பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த  குள்ளம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி கனகராஜ். இவருக்கு கவிதா (44) என்ற மனைவியும், தாரணி(14) பிரகதி (12) என இரு மகள்களும் உள்ளனர்.இவர் கேத்தனூர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தார். அதே வங்கியில் அவரின் தந்தை ரங்கசாமி பயிர்கடன் ரூ 75,000 வாங்கியிருந்தார். அதற்கு சாட்சியாக கனகராஜ் கையெழுத்திட்டுள்ளார்.

Also Read: கோவையில் பழங்குடியின குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் பட்டதாரி பெண் - மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து வாழ்த்து

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரின் தந்தை காலமானார்.அதன்பின் தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என கனகராஜிடம் வங்கி தரப்பு கூறியுள்ளது.  கடன் தொகையை தான் கட்டி விடுவதாகவும், உரிய கால அவகாசத்தில் சிறிது சிறிதாக செலுத்திவிடுவதாக வங்கி அலுவலரிடம் கனகராஜ் கூறியுள்ளார். ஆனால் விவசாயத்தில் ஏற்பட்ட தொடர் நஷ்டத்தால், தந்தை வாங்கிய பயிர்கடனை செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் தவணை செலுத்தவில்லை என கனகராஜின் சேமிப்பு கணக்கை எந்தவித முன் அறிவிப்பும் இன்றி  எஸ்.பி.ஐ வங்கியின் மேலாளர் சுந்தரமூர்த்தி  முடக்கியுள்ளளார்.இது குறித்து கனகராஜ் வங்கி மேளாலரிடம் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தன்னுடைய மருத்துவ செலவுக்காக சிறிது சிறிதாக சேர்த்து பணம் 1.50 லட்சம் தனது கணக்கில் உள்ளதாகவும், தற்போது  தனது மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், கணக்கை முடக்கியது தனக்கு சொல்லப்படவில்லை என கூறி அதை விடுவித்தால் தான் தன்னால் சிகிச்சைக்கு பணம் செலுத்தமுடியும் என கேட்டுள்ளார்.

Also Read: ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் அமல் : இன்று முதல் எவை இயங்கும்? எவை இயங்காது?

வங்கி தரப்பில் உங்கள் தந்தை பெற்ற பயிர்கடனை செலுத்தினால் தான் உங்களின் சேமிப்பு கணக்கு முடக்கத்தை நீக்க முடியும் என பதில் கொடுத்துள்ளனர். இதில் மிகவும் மனவேதனை அடைந்த கனகராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் சுயநினைவை இழந்துள்ளார். அவரை கோவை தனியார் மருத்துவனைக்கு அவசர சிகிச்சைக்காக அவரின் குடும்பத்தினர் அழைத்து சென்றனர். இந்த நிலையில் சிகிச்சை செய்ய பணமின்றி அவரின் குடும்பம் தவிப்பதை அறிந்து கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தினர் 20 க்கும் மேற்பட்டோர் வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தியை சந்தித்து,விவசாயி கனகராஜ் ICU வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் சேமிப்பு கணக்கில் உள்ள பணத்தை கொண்டு தான் சிகிச்சை அளிக்க முடியும், எனவே முடக்கப்பட்ட சேமிப்பு கணக்கை விடுவிக்க கோரியுள்ளனர்.

அதற்கும் மேலாளர் அலட்சியமாகவும் மரியாதையின்றியும் பேசியதாக கூறப்படுகிறது.பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயியின் கணக்கை விடுவிக்காவிட்டால் போராட்டத்தை முன்னெடுப்போம் என கூறியவுடன் அவர் சேமிப்பு கணக்கை விடுவிப்பதாக உறுதியளித்துள்ளார். ஆனால்  அவரது கணக்கு முடக்கத்தை விடுவிக்காத காரணத்தால், கனகராஜ் வங்கி கணக்கில் மருத்துவ செலவுக்கு பணமிருந்தும் எடுக்க வழியில்லாமல், தகுந்த சிகிச்சை எடுக்க முடியாமல் பரிதாபமாக நேற்று மருத்துவமனையில் உயிர் இழந்தார்.

இது குறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறுகையில், ‘இறந்த விவசாயி கனகராஜ்க்கு பள்ளி செல்லும் இரு குழந்தைகள் உள்ள நிலையில் , கேத்தனூர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளை மேலாளர் சுந்தரமூர்த்தியின் பாரபட்சமான நடவடிக்கை தான் விவசாயி இறப்புக்கு காரணம்,அவரின் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்யவேண்டும்.அவர் மீது  மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுத்து உயிர் இழந்த விவசாயி குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:

Tags: Bank accounts, Farmer, SBI Bank, Tamilnadu, Tirupur

அடுத்த செய்தி