Home /News /tamil-nadu /

'இது போன்ற பணிகளை எங்களுக்கு வழங்குங்கள்' - அரசுக்கு மாற்றுத்திறனாளி முதியவரின் கோரிக்கை

'இது போன்ற பணிகளை எங்களுக்கு வழங்குங்கள்' - அரசுக்கு மாற்றுத்திறனாளி முதியவரின் கோரிக்கை

கோரிக்கை வைக்கும் மாற்றுத்திறனாளி

கோரிக்கை வைக்கும் மாற்றுத்திறனாளி

Tiruppur District : தனது மகன் மற்றும் மருமகள் உடன் வசித்து வரும் இவர் தனது உழைப்பில் வாழ வேண்டும் என தொடர்ந்து ஒவ்வொரு அரசு அலுவலகமாக சென்று பழைய நாற்காலிகள் ஒயர் பின்ன வேண்டுமா? என கேட்டு பணி செய்து வருகிறார்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியான 62 வயது முதியவர் தனது மகனுடன் இருந்தாலும் உழைத்து வாழ வேண்டும் என ஒவ்வொரு அரசு அலுவலகமாக சென்று நாற்காலி ஒயர் பின்னி கொடுத்து வாழ்ந்து வருகிறார். இது போன்ற பணிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினால் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அடுத்த சிவன்மலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. 62 வயதான இவர் சிவன்மலை பகுதியில் இருந்து பேருந்து மூலம் திருப்பூருக்கு வந்து செல்ல வேண்டிய இடத்திற்கு நடத்தே சென்று நாற்காலிக்கான ஒயர் பின்னி கொடுக்கிறார். வயதானவர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வேலை பார்ப்பது சாதாரண விஷயம் தான். ஆனால் பார்வையற்ற இவரை போன்றவர்களுக்கு அது அசாத்தியமான ஒன்று. அதனை தனது முயற்சியால் செய்தும் காட்டியுள்ளார் சுப்பிரமணி.

பிறக்கும் போது நல்ல பார்வைத்திறனுடன் இருந்த இவருக்கு 10 வயதில் அம்மை தாக்கி கண் பார்வை பறிபோனது. 5 ம் வகுப்பு வரை மட்டுமே பயின்றிருந்த நிலையில் எந்த பணிக்கும் செல்ல முடியாமல் வீட்டிற்கு பாரமாக இருப்பதாய் உணர்ந்த இவர் ராணுவத்தில் பார்வை இழந்தவர்களுக்கு சுயதொழில் புரிய மற்றும் தனித்து செயல்பட பயிற்சி வழங்கப்படுவதை அறிந்தார்.



தனக்கு தெரிந்தவர்கள் மூலம் டேராடூனில் உள்ள பயிற்சி மையத்தில் 2 ஆண்டு பயிற்சி பெற்று திரும்பிய இவர் தற்போது அனைத்து பகுதிகளுக்கும் யாருடைய உதவியும் இன்றி சென்று நாற்கலிகளுக்கான ஒயர் பின்னி கொடுத்து வருகிறார்.



தனது மகன் மற்றும் மருமகள் உடன் வசித்து வரும் இவர் தனது உழைப்பில் வாழ வேண்டும் என தொடர்ந்து ஒவ்வொரு அரசு அலுவலகமாக சென்று பழைய நாற்காலிகள் ஒயர் பின்ன வேண்டுமா? என கேட்டு பணி செய்து வருகிறார். இவரின் பணி மிக நேர்த்தியாக இருப்பதால் பலர் இவரது தொலைபேசி எண்ணை பெற்று வைத்துக் கொண்டு இவரையே அழைத்து பணி கொடுக்கின்றனர்.



இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வரை வருமானம் வருவதாகவும் ஆனால் விலைவாசி உயர்வு காரணமாக தன்னால் இதனை கொண்டு சமாளிக்க முடியவில்லை எனவும் அரசு அலுவலகங்களில் உள்ள நாற்காலிகளை சீரமைக்கும் பணிகளை தன்னை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள் : 'குடிநீர், கழிவறை, வகுப்பறை வசதி வேண்டும்' - தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் அரசு பள்ளி மாணவர்கள்

உதவி என நினைத்தால் உழைக்க மட்டும் வாய்ப்பு தாருங்கள் எனும் இவர் தன்னம்பிக்கையின் உச்சமாக மிளிர்கிறார்.

செய்தியாளர் : பாலாஜி பாஸ்கர், திருப்பூர் மாவட்டம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Tiruppur

அடுத்த செய்தி