கொரோனா வார் ரூம்... திருப்பூர் மக்களின் மருத்துவ அவசரத்துக்கு உதவும் கொரோனா ஃபைட்டர்ஸ்!

திருப்பூர் கொரோனா வார் ரூம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கொரோனா வார் ரூம் அமைத்து தினமும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி செய்து தருகின்றனர்.

  • Share this:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவியதால் கொரோனா வார் ரூம் (Corona War room) அமைக்க  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் முடிவு செய்தார். கொரோனா முதல் அலை பரவலின் போது புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்தவர்கள், முன் கள பணியாளர்களுக்கு உணவு மற்றும் பல்வேறு சேவைகள் செய்து வந்த அமைப்பினருக்கு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தன்னார்வலர்கள் இணைந்து கொரோனா பைட்டர்ஸ் (Corona Fighters) என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் கொரோனா வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது. இதில்  8 தன்னார்வலர்கள் இரண்டு மருத்துவ அலுவலர்கள், வருவாய் துறையினர்  என 12 பேர் வீதம் 3 ஷிப்ட் முறையில் மாற்றி மாற்றி 24 மணி நேரமும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இதற்கென பிரத்தியேகமாக வலைதளத்தை உருவாக்கி அரசின் 104 சேவைக்கு அழைத்து திருப்பூரில் உதவி கேட்பவர்களுக்கும், திருப்பூர் மாவட்ட வார் ரூம் உதவி எண் 1077 என்ற எண்ணிற்கு அழைப்பவர்களையும் குறித்து வைத்து எந்த மருத்துவமனையில் படுக்கை வசதி உள்ளது. ஆக்சிஜன் படுக்கை விவரங்களை தொடர்ந்து சேகரித்து படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிக்கு ஏற்பாடு செய்து தருகின்றனர்.

தினமும் 400க்கும் மேற்பட்ட அழைப்புகளை சந்திப்பதாகவும் அதில் மருத்துவ ஆலோசனை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் ஆலோசனையும் ஆக்சிஜன் படுக்கை தேவைப்படும் நபர்களுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதிகளும், தனிமை படுத்தும் வசதி என தேவைப்படுபவர்களுக்கு அத்தகைய உதவி செய்து தருவதாகவும், தினமும் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பேசி வருகின்றனர்.

மேலும் பாதிப்பு அதிகம் உளள்வர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு படுக்கை வசதி செய்து தருவதாகவும்  உயிர்களை காப்பாற்ற செய்யப்படும் இந்த பணி தங்களுக்கு மிகவும் மனநிறைவை தருவதாகவும் கூறுகின்றனர். இந்த வாய்ப்பை வழங்கி தொடர்ந்து தங்களை கண்காணித்து படுக்கை வசதி இக்கட்டான நேரத்தில் உடனடியாக முடிவெடுத்து ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்து தரும் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

ஆக்சிஜன் படுக்கைக்காக மருத்துவமனைகளை  தேடி அலையும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகமும், தன்னார்வலர்களும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த வார் ரூம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது ‌. உதவி செய்யும் மனப்பான்மை உள்ள தன்னார்வலர்கள் மட்டுமல்லாது அவர்களை சரியாக பயன்படுத்தும் மாவட்ட ஆட்சியரும் பாராட்டுக்குரியவரே என்றே கூறலாம்.
Published by:Vijay R
First published: