உலகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்கள் தொழுகை முடித்து தங்கள் வீடுகளில் செய்யும் பிரியாணியை அருகில் உள்ளவர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்து வருகின்றனர் .இந்நிலையில்
திருப்பூர் தொழில் நகரில் ஏராளமான தொழிலாளர்கள் பிற மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
இவர்களது நண்பர்கள் சொந்த ஊரில் இருக்கும் நிலையில் ரம்ஜான் பண்டிகைக்கு பிரியாணி சாப்பிட வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் ஏராளமானோர் திருப்பூர் காங்கேயம் சாலை பெரிய கடை வீதியில் உள்ள பிரியாணி கடைகளில் குவிந்து வருகின்றனர். அப்பகுதியில் 60 பிரியாணி கடைகள் உள்ள நிலையில் 60 கடைகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மொத்தமாக பிரியாணி பார்சல் வாங்கிச் சென்று வருகின்றனர்.
Also Read :
இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதியுதவி வழங்குக... தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
அதிக அளவில் கூட்டம் உள்ளதால் அமர்ந்து சாப்பிட அனைத்து கடைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டு பார்சல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல கடைகளில் வாடிக்கையாளர்கள் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு டோக்கன் கொடுத்து அரை மணி நேரம் ஒரு மணி நேரம் கழித்து வந்து பிரியாணி பெற்று செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர். சில கடைகளில் கதவுகளை அடைத்து வாடிக்கையாளர்களை கொஞ்சம் கொஞ்சமாக அனுமதித்து பிரியாணி விற்பனை செய்து வருகின்றனர்.
ஏராளமானோர் காங்கயம் சாலையில் குவிந்ததால் அப்பகுதியில் லேசான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வழக்கமாக 3 டன் அளவிலான பிரியாணி மட்டுமே விற்பனையாகும் நிலையில் இன்று 13 டன் பிரியாணி காலியாகி உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.