திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட திருமூர்த்தி வனப்பகுதியில் குட்டிகளுடன் ஏராளமான யானைகள் உலவி வருகின்றன. யானைகள் உலவும் பகுதி என்பதால் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வனத்துறை அறிவித்துள்ளது. இங்குள்ள நீராதாரமாகத் திகழும் திருமூர்த்தி அணைக்கு இந்த யானைகள் நீர் அருந்த அடிக்கடி வருவதுண்டு. அவ்வாறு நீர் அருந்த வந்த யானைகளை இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் யானைகளை துரத்திச் சென்று கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். அவர்களின் நாய்கள் யானைகளை விரட்டுகின்றன. சிலர் கம்புகளால் அடித்து யானைகளை விரட்டுகின்றனர். யானைகளின் வாலைப் பிடித்து இழுத்து துன்புறுத்தும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோக்களை அவர்களில் சிலரே பதிவு செய்துள்ளனர்; இவை தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கற்களை வீசி தாக்குதல் நடத்தும் போது வலி தாங்காமல் குட்டி யானை பிளிறவே, தாய் யானை ஆக்ரோஷமடைந்து சிறுவர்களை துரத்தியுள்ளது. சிலர் யானைகளிடம் சிக்காமல் இருக்க மரத்தின் மீது ஏறி அமர்ந்துள்ளனர்.
தங்களை பாதுகாத்துக் கொள்ள இவர்கள் யானைகளை விரட்ட வில்லை என்பது காட்சிகளை காணும் போது தெரிகிறது. இந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள வனவிலங்கு ஆர்வலர்கள். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
வீடியோ காட்சிகளின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஆடுமாடு மேய்க்கச் சென்ற மலைவாழ் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதுகாக்கப்பட்ட பகுதியில் யானைகளை தாக்கிய நபர்களை கைது செய்ய வனப்பாதுகாப்பு அதிகாரி கணேஷ் ராம் தலைமையிலான குழுவினர் திருமூர்த்தி மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் நிறைவில், செட்டில்மென்ட் பகுதியை சேர்ந்த 25 வயதான காளிமுத்து, 32 வயதான செல்வம் மற்றும் 30 வயதான அருள்குமார் ஆகிய 3 பேர் மீது, வன உயிரின பாதுகாப்பு உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதிக்குள் மூவரும் தலைமறைவாகப் பதுங்கியிருப்பதால், அவர்களை வனத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
காட்டு யானை தாக்கி பலியானதாக செய்திகள் வெளிவரும் நிலையில், யானைகள் மறைமுகமாக சீண்டப்படுவதும், தாக்கப்படுவதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா என்பதே வனவிலங்கு ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
மேலும் படிக்க... மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் முதல் நாள் பிளான் என்னென்ன?
இதனிடையே, இரவு நேரம் ஆனதால் தேடுதல் பணியை தொடர முடியாத சூழலில், யானைகள் மீது தாக்குதல் நடத்திய மூவரையும், இன்று காலை அழைத்து வந்து ஒப்படைப்பதாக, மலைவாழ் மக்கள் உறுதியளித்தனர். இதையேற்று, வனத்துறையினர் தேடுதல் பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர். அவர்கள் 3 பேரும் இன்று கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elephant, Thiruppur, Udumalaipet