திருப்பூரில் அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து!

திருப்பூர் செளமியா மருத்துவமனை

மருத்துவமனையின் கட்டண கொள்ளை குறித்து சுப்பிரமணியத்தின் மகன்கள் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆகியோரிடம் புகார் அளித்திருந்தனர்.

  • Share this:
திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைக்கான உரிமத்தை மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப்பணித்துறை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் செயல்பட்டு வந்த சௌமியா மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், செளமியா மருத்துவமனையில் சுப்பிரமணியம் என்பவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்க மொத்தமாக 19 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வசூலித்துள்ளனர். இவ்வளவு பணம் வசூலித்தும், கடைசி நேரத்தில் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது. அதற்கும் மேலாக ரெம்டெசிவர் மருந்தை நோயாளிகளுக்கு 40,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இவ்வளவு செலவு செய்தும், சுப்பிரமணியம் உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையின் கட்டண கொள்ளை குறித்து சுப்பிரமணியத்தின் மகன்கள் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஆகியோரிடம் புகார் அளித்திருந்தனர்.

இதனையடுத்து சுகாதாரத்துறை சார்பில் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறை மற்றும் ஊரக நலப்பணிகள் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் மருத்துவமனை மீதான கட்டண கொள்ளை புகார் உண்மை என நிரூபனமானது. இதையடுத்து சௌமியா மருத்துவமனைக்கு அளிக்கப்பட்டிருந்த கொரோனா சிகிச்சைக்கான உரிமத்தை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனை அடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: