திருப்பத்தூரில் கோஷ்டி மோதல் காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்துார் அருகே கலைஞர் நகரை சேர்ந்த சில இளைஞர்களுக்கும், டிஎம்சி காலனியை சேர்ந்த சில இளைஞர்களுக்குமிடையே ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில் நடக்கும் திருவிழாவின்போது மோதல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கலைஞர் நகரில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இரவு சுமார் 9 மணியளவில், டிஎம்சி காலனியை சேர்ந்த சிலர் கலைஞர் நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் முகிலன்(22) என்பவரை சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் முகிலனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. உடனே முகிலனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால் ஆத்திரம் தீராத மர்ம நபர்கள், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த முகிலனை ஓட ஓட சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இந்த கலவரத்தால் மருத்துவமனை வளாகத்தில் இருந்த நோயாளிகள் மற்றும் பொது மக்கள் நாலா புறமாக சிதறியடித்து ஓடினர்.
Also read... பதிவேடுகள் சரிபார்க்கும் போது ஏற்பட்ட பிரச்சனை - பஞ்சாயத்து தலைவியை தாக்கிய ஊராட்சி செயலாளர்
பின்னர் தகவலறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட முகிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர்.
ஆனால் அதற்குள் முகிலனின் தரப்பினர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி முகிலனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்தனர்.
அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் போலீசார் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அசம்பாவிதங்கள் தவிர்க்க 100க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-செய்தியாளர்: வெங்கடேசன். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.