செவிலியர்கள் போராட்டம்: ஊதிய பாக்கியை வழங்கக் கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

ஊதிய பாக்கியை வழங்கக் கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை செவிலியர்கள் முற்றுகையிட்டனர்.

தங்களுக்கு பணியாற்றியதற்கான சான்றிதழ் மற்றும் இரண்டரை மாத ஊதிய பாக்கியை வழங்கக் கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை செவிலியர்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

  • Share this:
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு தன்னார்வ செவிலியர்களாக பணியாற்றி வந்த 60 பேரை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள செவிலியர்கள் தங்களுக்கு பணியாற்றியதற்கான சான்றிதழ் மற்றும் இரண்டரை மாத ஊதிய பாக்கியை வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

கொரோனா தொற்று சூழலில் நோயைக் கட்டுப்படுத்துவதற்கும்,  நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காகவும் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குநர் மூலமாக 60க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என்றும் பணியிலிருந்து நீக்கம் செய்வதாகவும் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து வாய்மொழி உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட செவிலியர்களில்  50க்கும் மேற்பட்டவர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட செவிலியர்கள் கூறுகையில், நாங்கள் எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா சூழ்நிலையிலும் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிகிச்சை அளிக்கும் நோக்கத்துடன் பணிபுரிந்து வந்தோம். எங்களில் சில செவிலியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். ஊதியம் சரியாக கிடைக்காததையும் பொருட்படுத்தாமல் நாங்கள் எங்கள் பணியைத் தொய்வின்றி செய்துள்ளோம் என்றனர்.

Also read: சானிடைசரில் தீக்குச்சி வைத்து விளையாடிய சிறுவர்கள் - திடீரென தீ பற்றியதில் இரு சிறுவர்களுக்கு படுகாயம்

தங்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட செவிலியர்கள், எங்களுக்கு அரசு மருத்துவமனையில் பணியாற்றியதற்கான அனுபவச் சான்று வழங்க வேண்டும். இரண்டரை மாத கால ஊதிய பாக்கியை உடனடியாக தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Published by:Rizwan
First published: