ஒரு விபத்து பலரின் வாழ்வை நிர்முலமாக்கிய பரிதாபம் ஏற்பட்டுள்ளது. உண்ணாமல், உறங்காமல் ஆட்சியர் அலுவலகம், கல்குவாரி என கண்ணீரோடு புலம்பி திரிந்தபடி காத்திருக்கும் உறவுகள் எதிர்காலத்தை நினைத்து குடும்ப பொறுப்பை சுமக்க தயாராகும் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மகன்.
நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே அடைமிதிப்பான் குளம் கல்குவாரி விபத்து 6 பேர் சிக்கிய நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 14ஆம் தேதி இரவில் பாறைகள் சரிந்து நடந்த விபத்தில் பல்வேறு குடும்பத்தில் மகிழ்ச்சி பறிபோயி உள்ளது. 6 பேரில் 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் இருவர் உயிர் இழந்துள்ளனர். லாரி ஓட்டுனர்கள் ராஜேந்திரன் மற்றும், செல்வகுமார் ஆகிய இருவரை மீட்டும் பணி நடைபெற்று வருகின்றன. 5வது நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவரை மீட்டும் பணி நடந்து வருகிறது.
இதனிடையே அவர்கள் இருவரையும் விரைந்து மீட்க வலியுறுத்தி, அவர்களது குடும்பத்தினர் கண்ணிரோடு கோரிக்கை வைத்துள்ளனர். அதுபோல அரசு வேலை (தலையாரி ) கிடைத்ததனால் இன்றோடு இந்த வேலைக்கு கடைசி நாள் என்று கூறி சனிக்கிழமை வேலைக்கு சென்ற செல்வன் உயிரிழந்த சோகம் என பலரின் வாழ்வை ஒரு விபத்து புரட்டி போட்டுள்ளது. சொல்ல முடியாத அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடைமிதிப்பான் குளம்பகுதியில் தனியார் கல்குவாரியில் நாங்குநேரி அருகே காக்கைகுளம் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுனர் செல்வகுமார், தச்சநல்லூர் உருடையான் குடியிருப்பைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் ராஜேந்திரன், இளையநயினார் குளத்தை சேர்ந்த செல்வம், விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன், நாட்டார் குளத்தை சேர்ந்த விஜய் மற்றும் ஆயர்குளத்தைச் சேர்ந்த மற்றொரு முருகன் ஆகிய 6 பேர் பணியில் இருந்த போது குவாரியில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறை இடிபாட்டில் சிக்கிக்கொண்டனர்.
விபத்தில் சிக்கி லேசான காயமடைந்த நபர்களான விட்டிலாபுரத்தை சேர்ந்த முருகன், விஜய் ஆகியோர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாறை சரிந்து விழுந்து கிட்டாட்சி இயந்திரத்தில் சிக்கிய அதன் ஓட்டுனர் செல்வம் என்பவர் பல மணி நேரம் காப்பாற்றும் படி போராடிய நிலையில் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். நான்காவது நபரான நாங்குநேரி ஆயர்குளத்தை சேர்ந்த முருகன் சடலமாக மீட்கபட்டார்.
தொடர்ந்து, கல்குவாரியில் சிக்கிய மேலும் 2 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து இந்த பகுதிகளில் முகாமிட்டு தேடி வருகின்றனர். 5வது நபர் அடையாளம் காணப்பட்டு மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கல்குவாரியில் சிக்கியுள்ள லாரி ஓட்டுனரான ராஜேந்திரன் மனைவி மணிமேகலை, நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்திக்க தனது பத்து வயது மகள் மற்றும் சகோதர்களுடன் வந்திருந்தார். பாறை இடிபாட்டில் சிக்கிய கணவரின் கதி என்னவென்று தெரியவில்லை. எனது மகன் சோகத்திலும், தந்தையின் கதி என்னவென்று தெரியாமல் 11-ம் வகுப்பு அரசு தேர்வு எழுத பள்ளிக்கு சென்றுள்ளான். கணவரை எப்படியாவது மீட்டு தாருங்கள் என்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் காலில் விழுந்து அழுது புலம்பினார்.
கல்குவாரி, ஆட்சியர் அலுவலகம் என கண்ணீரோடு, தனது கணவரை மீட்க அதிகாரிகளிடம் கெஞ்சி கொண்டு இருக்கிறார். அதோடு நான்தான் தந்தை இல்லாமல் வளர்ந்தேன் எனது குழந்தைகளுக்கும் அதே நிலை ஏற்பட்டு விட்டதே இரு குழந்தைகளையும் கணவர் இல்லாமல் எப்படி காப்பாற்றுவேன் என அழுது புலம்பியது காண்போர் கண்களில் கண்ணீர் வரவழைப்பதாக இருந்தது. இதைவிட கொடுமையான விஷயம் என்னவென்றால், வெள்ளிகிழமை வரை 4 நாட்கள் விடுமுறையில் இருந்த ராஜேந்திரன் சனிக்கிழமை தான் பணிக்கு வந்துள்ளார்.
கல்குவாரியில் சிக்கியுள்ள மற்றொருவர் நாங்குநேரி தாலுகா காக்கை குளத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் செல்வக்குமார். இவரின் மனைவி சேர்மகனி, தாய் தந்தை மாமனார் மாமியார் மற்றும் குடும்பத்தினர் மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் நெல்லை ஆட்சியரை சந்திக்க திரண்டு வந்தனர். அப்போது அங்கே ஆட்சியர் இல்லாததால் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலரை சந்தித்து செல்வகுமாரை மீட்டு தரும் படி கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செல்வக்குமாரின் மாமியார் பேச்சியம்மாள், திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து அவருக்கு உதவினர். மாமனார் வீரன் கண்ணீர்மல்க கூறும்போது, எனது மகளின் கணவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. எனது மகள் ஒன்றரை வயது குழந்தையுடன் தவித்து வருகின்றார் என்று கண்ணீர் மல்க கூறினார்.
இந்த விபத்தில் கிட்டாட்சி ஓட்டுனர் செல்வம் வெளிப்பகுதியில் முக்கால் பகுதி உடல் இடிபாடுகளுக்குள் சிக்கியபடி தன்னை காப்பாற்றும் படி சுமார் 17 மணி நேரம் கூக்குரலிட்டபடி உயிரை கையில் பிடித்து வைத்திருந்தார். இருப்பினும் அடுத்தடுத்து பாறைகள் சரிந்து விழுந்ததால், அவரை மீட்க முடியாமல் வீரர்கள் திணறினர். பின்னர், ஒருவழியாக 17 மணி நேர போராட்டத்துக்கு பிறகு வீரர்கள் கயிறு கட்டி கீழே இறங்கி செல்வத்தை உயிருடன் மீட்டு உடனடியாக ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், செல்வம் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
Must Read : வடகலை - தென்கலை சச்சரவு... காஞ்சிபுரத்தில் காலதாமதமாக தொடங்கியது வரதர் வீதி உலா
செல்வம் தலையாரி வேலைக்கு மனு அளித்து அவருக்கு தலையாரி வேலை கிடைத்துள்ள நிலையில், சம்பவம் நடந்த அன்றோடு குவாரி பணிகளை நிறைவு செய்துவிட்டு, திங்கள் கிழமை முதல் அரசு வேலையில் சேருவதற்காக அவர் திட்டமிட்டிருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக இரவு பாறைகள் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார்.
அவரை உயிருடன் மீட்டு, அவரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இந்நிலையில், இறந்த செல்வத்தின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு நாள் இரவில் நிலச்சரிவு காரணமாக 4 பேரின் வாழ்க்கை முடிவுக்கு வந்ததோடு மட்டுமல்லாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நிலையையும் நிர் மூலமாக்கி உள்ளது. இந்த விபத்தால் இருண்டு போயுள்ள, வாழ்வாரத்தையும், உறவையும் இழந்துள்ளவர்களின் வாழ்வில் அரசு ஒளியேற்றுமா?
செய்தியாளர் - சிவமணி, திருநெல்வேலி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Quarry, Tirunelveli