ஆபாசப்படம் பார்த்த இளைஞர்.. போனில் மிரட்டிய போலி போலீஸ் கைது...!

  • News18 Tamil
  • Last Updated: December 11, 2019, 10:35 PM IST
  • Share this:
ஆபாசப் படங்களைப் பார்ப்போரின் பட்டியல் தயாராகி வருவதாக போலீசார் அறிவித்துள்ள நிலையில், நெல்லையில் ஆபாசப் படம் பார்த்ததாக இளைஞர் ஒருவரை காவலர் ஒருவர் செல்போனில் மிரட்டும் ஆடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.  ஆனால் போனில் பேசியது போலீஸ்தானா என்று விசாரித்ததில் தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான காவல்துறையின் தனிப் பிரிவு கூடுதல் டிஜிபியின் இந்த பேட்டி, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபாசப் படம் பார்த்தால் போலீசார் கைது செய்வார்கள் என்ற செய்தியும், தீயாகப் பரவி வருகிறது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் இளைஞரை காவலர் என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் ஆபாசப் படம் பார்த்ததாக மிரட்டும் ஆடியோ வெளியாகி மேலும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது


நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், இளைஞர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டார். முதலில் காவலர் கூறும் பிரச்னையை கிண்டலாக எடுத்துக் கொண்ட சிறுவன் அதன்பின்பு பம்மினார்.

சிறுவன் எங்கிருக்கிறார், எந்த நேரத்தில் என்ன படம் பார்த்தார் என எல்லா விவரங்களும் தங்களிடம் இருப்பதாக காவலர் சொல்லச் சொல்ல சிறுவன் பேசும் தொனி அப்படியே மாறுகிறது.

சிறுவனின் தந்தையிடம் சொல்லப் போவதாக கூறும் காவலர், இதுவரை 400 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் சிறுவன் 7000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் எனவும் எச்சரித்தார்; சிறுவனோ கெஞ்சத் தொடங்கினார்.ஒரு கட்டத்தில் தான் நல்ல பையனாக இருப்பேன் என சிறுவன் வாக்குறுதி கொடுக்க, ஆபாசப் படம் பார்ப்பவர்களால் தான் நாட்டில் பாலியல் பலாத்காரங்கள் நடப்பதாக காவலர் கூறுகிறார்.

தற்போது நெல்லை மாவட்டத்தில் வைரலாகப் பரவி வரும் இந்த ஆடியோ குறித்து காவல்துறை வட்டாரங்களிடம் விசாரித்தபோது, இந்த குற்றச்சாட்டை மறுத்த போலீசார், பாலியல் படம் பார்ப்பவர்கள் குறித்த விசாரணை எதுவும் நடைபெறவில்லை என்று விளக்கமளித்தனர்.

மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மிரட்டப்பட்ட நபர் மூன்றடைப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர் என்பதும் அவரை மிரட்டியது அதே ஊரை சேர்ந்த அவரது நண்பர் கார்த்திக் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, கார்த்திக் மீது ஏமாற்றுதல், மிரட்டுதல், இணையதள குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்றடைப்பை சேர்ந்த கார்த்திக், பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
First published: December 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்