தமிழ்நாடு காவல் துறையில் ஓய்வற்ற பணிச்சுமை காரணமாக 36 பேர் கட்டாய பணி விடுவிப்பு கோரியிருப்பதாக உளவுப்பிரிவு போலீசார் கூறியுள்ள நிலையில், இலைமறை காயாக இருந்த இந்த பிரச்சனை தற்போது உதவி ஆய்வாளர் அருணாசலத்தின் ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அருணாச்சலம். காவல் பணியில் உள்ள ஈடுபாட்டால் கடந்த 2002ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். 2011 ஆம் ஆண்டு முதல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
கடந்த மூன்று மாதங்களாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் இவர் கடந்த மூன்று மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகக் கூறி பரபரப்பு ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ள அவர், கடந்த ஒரு வருடமாக விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து மன உளைச்சலில் வேலை செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 மாதங்களில் ஒருநாள் கூட தொடர்ந்து 5 மணி நேரம் தூங்கியதில்லை என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தனது குழந்தை உறங்கிய பின் வீட்டுக்குச் செல்வதும், குழந்தை காலையில் எழுவதற்கு முன் பணிக்குச் செல்வது வாடிக்கையாக உள்ளதாக குறிப்பிடும் அவர், தன்னால் ஒரு 10 நிமிடம் கூட குழந்தையுடன் நேரத்தை செலவழிக்க முடியவில்லை என மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த பதிவை போடுவதால் தனக்கு துறைரீதியான தண்டனை கிடைத்தாலும் பரவாயில்லை என்றும், மனக்குமுறலை வெளிக்காட்டி தண்டனை அனுபவிப்பதில் தவறில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடியோ தற்போது திருநெல்வேலியில் வைரலாகி வருகிறது.
ஏற்கனவே 35 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கட்டாய பணி விடுவிப்பு கோரி இருந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் அதனை மெய்ப்பிக்கும் விதமாக இந்த ஆடியோ பதிவு வெளிவந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சுரேஷ் குமாரிடம் கேட்டபோது மற்ற பணிகளை போல காவல்துறை பணி எளிதானது அல்ல. அது சவாலான பணி என்றும், அதனை மேற்கொள்ள காவல் துறையினர் தயாராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
58 வயதிற்கு மேற்பட்ட ஒருசிலர் மட்டுமே விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளதாகவும், மற்றபடி மன உளைச்சல் காரணமாக யாரும் விடுவிப்பு கோரியதாக தெரியவில்லை என்றும் தகவல் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சைலேந்திரபாபு, காவல்துறையினருக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். அது போன்ற நடைமுறை திருநெல்வேலிக்கு அமலுக்கு வந்ததாக தெரியவில்லை.
காவல் நிலையங்கள் மற்றும் ரிசர்வ் போலீசார் என 1,500க்கும் மேற்பட்டவர்கள் பணியில் இருந்தாலும் எவருக்கும் வார விடுமுறை இல்லை என்ற நிலையே காணப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, காவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதன் காரணமாக வார விடுமுறை வழங்க முடியவில்லை என்று குறிப்பிடுகின்றனர்.
மனச்சுமையுடன் பணியாற்றக்கூடிய காவலர்களிடம் அதிகாரிகள் பேசி அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி அதற்கான தீர்வு காண வேண்டும். மாறாக மனச்சுமையிலேயே காவல்துறையினர் பணியாற்றினால் அது பொதுமக்களுக்கு இடையூறாக அமையும் எனக் குறிப்பிடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Police, Tirunelveli