Home /News /tamil-nadu /

15 ரூபாய்க்குள் வயிறாற ஒரு வேளை உணவு 2 ரூபாய்க்கு இட்லி, பூரி விற்பனை செய்யும் மூதாட்டி

15 ரூபாய்க்குள் வயிறாற ஒரு வேளை உணவு 2 ரூபாய்க்கு இட்லி, பூரி விற்பனை செய்யும் மூதாட்டி

பசி போக்கும் மூதாட்டி

பசி போக்கும் மூதாட்டி

Tirunelveli District : திருநெல்வேலி மாவட்டத்தில் மூதாட்டி ஒருவர் குறைந்த விலையில் வயிறு நிறைய உணவளித்து வருவதற்கு பொதுமக்கள் மனதார பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள சிவந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (73), ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. இவரது மனைவி ஆவுடையம்மாள் (வயது 68) தனது வீட்டின் அருகேயே இட்லி கடை நடத்தி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் அவர்கள் இருவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் ஆவுடையம்மாள் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அவரது வீட்டின் அருகேயே மிக சிறிய அறையில் இட்லி மற்றும் பூரி வியாபாரம் செய்து வருகிறார், இங்கு ஒரு இட்லி மற்றும் பூரியின் விலை வெறும் 2 ரூபாய் மட்டுமே, மேலும் இதற்கு சுவையான சட்னி மற்றும் சாம்பாரும் உண்டு. ஓரளவு பெரிய கடைகளிலேயே இட்லியின் விலை 15 ரூபாய் வரை விற்கப்படும் நிலையில் 15 ரூபாயில் ஒரு வேளை உணவை வயிறார உண்டு விடும் வகையில் இவரது சேவை உள்ளது.

இதனால் இப்பகுதியை சுற்றியுள்ள அகஸ்தியர்பட்டி, வி.கே.புரம், ஆறுமுகம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் உணவருந்தி வருகின்றனர். அதோடு பள்ளி செல்வோர் கூலி வேலைக்கு செல்பவர்கள் பார்சல் வாங்கி செல்கின்றனர். காலை நேரத்தில் மூதாட்டியின் இட்லி கடையில் இட்லி பூரி வாங்க கூட்டம் அலை மோதுகிறது. இவரிடம் அதிகபட்சமாக ரூ.10 முதல் ரூ.15 செலவில் அனைவரும் வயிறார சாப்பிட முடியும், குறிப்பாக விலை குறைவு என்பதால் ஏராளமான முதியவர்கள் சைக்கிள்களிலும், மோட்டார் வாகனங்களிலும் வந்து இட்லி பார்சல் வாங்கி செல்கின்றனர்.அம்மா உணவகத்திற்கு இணையாக இங்கு விலை குறைவு என்பதாலும் மூதாட்டி தாய் போன்று சுவையாக சட்னி சாம்பாரோடு இட்லி வழங்குவதால் இப்பகுதியினர் இந்த உணவகத்தை அம்மா உணவகம் என்று அன்போடு அழைக்கின்றனர். இவரது கடைக்கு பெயர் பலகை கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ |  நியூஸ் 18 செய்தி எதிரொலி : அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பு கொடுத்தது தமிழக அரசு
 இதுகுறித்து ஆவுடையம்மாள் கூறுகையில், எனக்கு தலையில் ஒரு ஆபரேசன் செய்யப்பட்டது. அதன் பிறகு தனியாக சிறிய அளவில் தொழில் செய்யலாம் என்பதால் கடந்த 25 ஆண்டுகளாக இட்லி வியாபாரம் செய்து வருகிறேன், தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தாலும் இதனை நான் சேவை மனதோடு செய்து வருகிறேன், இந்த தொழிலில் நான் மட்டுமே ஈடுபடுகிறேன், எனது குடும்பத்தில் யாரையும் உதவிக்கு அழைக்கமாட்டேன்.இதற்காக அதிகாலையிலேயே கண்விழித்து மாவு அரைத்தல், சட்னி, சாம்பார் தயார் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்வதற்கு முன்பாக தயார் செய்து வைத்து விடுகிறேன், மாலையிலும் சிறிய கடை வைப்பேன், இதில் எனக்கு பெரிய அளவில் வருமானம் கிடைப்பதில்லை, இதில் இருந்து எனது குடும்பத்திற்கு சிறிதுகூட செலவு செய்ய முடியாது காலை மாலை என இருவேளை உணவு சேவை நோக்கத்திற்காகவே செய்கிறேன், எனது கடை உணவை நம்பி ஏழை எளிய மக்கள் பலர் இருப்பதால் விடுமுறை கூட எடுத்ததில்லை என்றார்.இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், எங்களுக்கு மிக குறைந்த விலையில் இங்கு ருசியான இட்லி கிடைக்கிறது, நல்லா சாப்பிட்டால் மொத்த செலவு 15 ரூபாயை கூட தாண்டாது, இதனால் நாங்கள் அம்மா உணவகம் என்றே அழைக்கிறோம், பத்து ரூபாய்க்கு இட்லி கேட்டால் அவர் எண்ணி 5 இட்லி என தருவதில்லை 5 -க்கு மேல் கையில் வருவதை எடுத்து தருவார். தனது வயதான காலத்தில் பணம் தேவை என்பதை பற்றி சிறிதும் யோசிக்கமால் பலரின் வயிற்று பசி ஆற்றும் இவருக்கு பிற்காலத்தில் அரசு ஏதாவது உதவி தொகை வழங்கினால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என்கின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Tirunelveli

அடுத்த செய்தி