Home /News /tamil-nadu /

கேரளா ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட திமுக கவுன்சிலர்கள்; பெரும்பான்மை இருந்தும் கலக்கத்தில் மாவட்டத் தலைமை

கேரளா ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட திமுக கவுன்சிலர்கள்; பெரும்பான்மை இருந்தும் கலக்கத்தில் மாவட்டத் தலைமை

நெல்லை கவுன்சிலர்கள்

நெல்லை கவுன்சிலர்கள்

திருநெல்வேலியில் தி.மு.க சார்பில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களை அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ரிசார்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தமிழகத்தில் தி.மு.க வென்ற  21 மாநகராட்சிகளுக்கும் மேயர், துணை மேயர் வேட்பாளர்களை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரையின் பேரில் தி.மு.க தலைமை அறிவிக்கும். ஆனாலும், நெல்லை மத்திய மாவட்டச் செயலாளரும், பாளை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் வெற்றி பெற்ற தி.மு.க கவுன்சிலர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

தமிழக -கேரள எல்லையில் உள்ள சொகுசு விடுதிக்கு கவுன்சிலர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்ட தி.மு.க என்ன நடக்கிறது. அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்றும் கவுன்சிலர்களை கடத்திக் கொண்டு போக வேண்டிய நிலை ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நெல்லை மாநகராட்சியில் 48 இடங்களில் போட்டியிட்ட தி.மு.கவில் 44 பேர் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றுள்ள தி.மு.க கவுன்சிலர்கள் அனைவரும் நேற்றே கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

நெல்லை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க சார்பாக 48 பேரும், கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஏழு பேர் என 55 வார்டுகளுக்கும் போட்டியிட்டதில் 50 வார்டுகளில் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க மட்டும் தனியாக 44 வார்டுகளில் வென்றிருக்கிறது.

அதனால் தனிப்பெரும்பான்மையுடன் இருப்பதால் தி.மு.க கவுன்சிலர்கள் சார்பில் மேயர், துணை மேயர் பதவிகளை பெறுவது உறுதியாகியுள்ளது.

தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களில் ஒரு சிலர் மட்டுமே உடனடியாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். 40க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாபைச் சந்தித்து அவருடன் இணைந்து மாலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அரசு பொறியியல் கல்லூரிக்கு சென்று வெற்றி சான்றிதழைப் பெற்றனர்.

பின்னர் அனைவரும் கூட்டாக  மாவட்டச் செயலாளருடன் இணைந்து புகைப்படம்  எடுத்தனர். ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் மாவட்ட பஞ்சாயத்து, பஞ்சாயத்து தலைவர் போன்ற பொறுப்புகளுக்கான தேர்தலின்போது கட்சித் தலைமை யார் பெயரையும் அறிவிக்காத நிலையில் மாவட்ட கழக செயலாளர்கள் வேட்பாளர்களை நிறுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

திருச்சி மாநகராட்சி மேயர் யார்? அமைச்சர் கே.என்.நேரு தேர்வு இவர் தான்

ஆனால் அவர்களையும் மீறி தி.மு.க-வில் பணம் பலம் படைத்த நபர் கோதாவில் இறங்கினர். அதனால் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டது. எவ்வளவோ முயன்றும் மாவட்டக் கழகம் நினைத்த வேட்பாளர் வெற்றி பெற முடியவில்லை. மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவியை கைப்பற்றவும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

எனவே இந்த முறை மேயர் வேட்பாளைரை கட்சித் தலைமையே அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெல்லை மாநகராட்சி மேயர் கனவுடன் தி.மு.கவில் பலரும் இருக்கிறார்கள். 1-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தலைமை செயற்குழு உறுப்பினரான கே.ஆர்.ராஜூ, முன்னாள் தச்சநல்லூர் மண்டல சேர்மன் சுப்பிரமணியன், மத்திய மாவட்ட மகளிரணிச் செயலாளர் மகேஸ்வரி, 12-வது வார்டில் வெற்றி பெற்றுள்ள கோகிலவாணி, இளைஞரணி அமைப்பாளரான கருப்பசாமி, 3வது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கிட்டு என்கிற கிருஷ்ணசாமி, ரவீந்திரன், உள்ளிட்ட பலரது பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றன.

மேயர் வேட்பாளரை கட்சித் தலைமை அறிவிப்பதற்கு முன்பாக வசதி படைத்த நபர் அவர்களிடம் குதிரை பேரம் நடத்தி தேவையான வசதிகளை செய்து கொடுத்து வாக்குகளைப் பெற்று விடக்கூடும் என்கிற சந்தேகம் நிலவுவதால், மத்திய மாவட்ட தி.மு.க செயலாளரான அப்துல் வஹாப் அனைவரையும் வெற்றி சான்றிதழ் பெற்ற கையோடு வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து அழைத்துச் சென்றுள்ளார்.

பெண் வேட்பாளர்கள் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து நெல்லை நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான கன்னியாகுமரியில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுக்கிறார்கள் என கூறப்பட்டது.

ஆனால் அவர்கள் தற்போது தமிழக கேரளா எல்லையில் உள்ள பூவார் பகுதியில் கடற்கரையோர ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குமரி மாவட்டத்தில் இன்று தங்கும் அவர்கள் பின்னர் அங்கிருந்து கேரளாவின் மற்ற பாதுகாப்பான ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

நெல்லை மாநகராட்சியின் மேயர், துணை மேயர் மற்றும் மண்டலத் தலைவர் பொறுப்புக்கு கடும் போட்டி நிலவுவதால் தி.மு.க கவுன்சிலர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் தங்க வைத்து குதிரை பேரம் நடப்பத்தைத் தடுக்க முயற்சி நடப்பதாத் தெரிகிறது.

மார்ச் 2-ஆம் தேதி கவுன்சிலர்கள் அனைவரும் பதவியேற்க வேண்டும். பதவியேற்பு முடிந்த பிறகு அரசியல் சுற்றுலா தொடரும். இருப்பினும், மறைமுகத் தேர்தல் நடக்க இருக்கும் மார்ச் 4-ம் தேதி என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்துவிடும்.

நெல்லை மாநகராட்சியை திமுக கைப்பற்றினாலும் திமுகவில் யார் கைப்பற்றுவது என்ற போட்டியை தவிர்க்க தலைமை வேட்பாளர் அறிவிப்பு கண்டிப்பான உத்தரவிட வேண்டும். கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இதுபோன்ற போட்டி வேட்பாளர்கள் ஆதிக்கம் குறையும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட கசப்பான அனுபவமே திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வாஹாப் வெற்றி பெற்ற உறுப்பினர்களிடம் வெற்றி சான்றிதழை வாங்கி வைத்தது. அவர்களைப் பாதுகாப்பான இடத்தில் அடுத்த நான்காம் தேதி வரை தங்க வைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்க வைத்துள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: DMK, Local Body Election 2022, Tirunelveli

அடுத்த செய்தி