Home /News /tamil-nadu /

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம்: தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம்: தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் சஸ்பெண்ட்

School wall collapses

School wall collapses

நெல்லை பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம் தொடர்பாக வருவாய் கோட்ட ஆட்சி தலைவர் விசாரணையில்  பள்ளி நிர்வாகத்தினர் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்தனர்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    நெல்லை பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரம் தொடர்பாக வருவாய் கோட்ட ஆட்சி தலைவர் விசாரணை யில்  பள்ளி நிர்வாகத்தினர் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்தனர். இதனிடையே பள்ளி தலைமையாசிரியர் மற்றும் மூன்று உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் கடந்த 17ஆம் தேதி இடைவேளையின்போது கழிப்பறை சுற்றுச்  சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியாயினர்.  மேலும் இந்த விபத்தில் 6 மாணவர்கள் படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பள்ளி விபத்து குறித்து விசாரணை நடத்த கோட்டாட்சியர் சந்திரசேகர்  தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர்  உத்தரவு பிறப்பித்தார். இந்த சிறப்பு குழு கள ஆய்வு நடத்தி முதற்கட்ட விசாரணை அறிக்கையை  மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் சமர்ப்பித்துள்ளது மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் எத்தனை மாணவர்கள் பயின்று வருகின்றனர், ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் உள்ளிட்ட  அனைத்து ஆவணங்களுடன் பள்ளி நிர்வாகத்தினரை கோட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த நிலையில் சாப்டர் பள்ளியை நிர்வகித்து வரும் டயோசீசன் கல்வி நிறுவனங்களின் மேல்நிலைப்பள்ளிகளின்  நிர்வாக மேலாளர் புஷ்பராஜ் உள்ளிட்ட இருவர்  கோட்டாட்சியர் முன்னிலையில் பள்ளி ஆவணங்களுடன் ஆஜரானார். கோட்ட ஆட்சி தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்டோர் பள்ளியின் ஆவணங்களை ஆய்வு செய்தனர். ஒரு மணி நேர விசாரணைக்குப் பின் பள்ளி நிர்வாகம் சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமானதாக இல்லை எனவும் மாலைக்குள் உரிய அனைத்து  ஆவணங்களுடன் மீண்டும் ஆஜராக வேண்டும் எனவும் ஆட்சித்தலைவர் பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதையும் படிங்க: விடுதியில் இருந்து போக சொல்கிறார்கள்.. மீண்டும் வேலை கிடைக்குமான்னு தெரியாது? - கண்ணீர் வடிக்கும் ஃபாக்ஸ்கான் ஊழியர்கள்


    இதனிடையே பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து டயோசீசன் நிர்வாகம் மற்றும்  தென்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டல பேராயர் பர்னபாஸ் ஆகியோர் உயர்மட்டக்குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டு இருந்தது. இக்குழு விசாரணை நடத்தியதன் அடிப்படையில் சாப்டர் பள்ளி தலைமையாசிரியர் பெர்சீஸ் ஞானசெல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேசுராஜ், அருள் டைட்டஸ், சுதாகர் டேவிட் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டு அதற்கான கடிதத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ளது .

    மேலும் படிங்க: நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை என்ன? தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி


    இதனடிப்படையில் நால்வரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளி ஆவணங்களை ஆய்வு செய்தபின் அதன்  மீது எழும் சந்தேகத்தின் அடிப்படையில் ஆவணம் வழங்கிய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பள்ளியில் விபத்து நிகழ்ந்த அன்று  பணியில் இருந்த ஆசிரியர்கள் என பலரிடமும் கோட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான குழு விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
    Published by:Murugesh M
    First published:

    Tags: School students, Tirunelveli

    அடுத்த செய்தி