Home /News /tamil-nadu /

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டர்..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டர்..

முதலமைச்சர்  வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டர் கைது

முதலமைச்சர் வாகனம் மீது டம்ளரை வீசிய டீ மாஸ்டர் கைது

Tea master arrested : திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு விலக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தின் மீது சில்வர் டம்ளரை வீசிய டீ மாஸ்டர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி அலுவலகம் முன்பு முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை திறந்து வைத்த அவர் தொடர்ந்து தனியார் உரத்தொழிற்சாலையில் 22 மெகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து ஆயிரம் கோடி மதிப்பிலான அறைகலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் முன்பு 4,755 கோடி மதிப்பிலான 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. தூத்துக்குடி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு திருநெல்வேலி வழியாக முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சென்றார்.  மாலை 4 மணிக்கு மேல் நகர்கோவில் மற்றும் பேயன் குழி, உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

இதனிடையே, முன்னதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கிணறு எல்லையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நெல்லை தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் மற்றும் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.  இந்நிலையில், காவல்கிணறு விலக்கு அருகே முதலமைச்சரின் வாகனம் வரும் பொழுது அவரது காரின் மீது டீக்கடையில் மாஸ்டராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் சில்வர் கிளாஸ் ஒன்றை வாகனத்தின் மீது வீசினார். டம்ளரை தூக்கி எறிந்ததோடு மட்டும் அல்லாமல் அந்த வழியாக சென்ற பேருந்து ஒன்றில் ஏறி தப்பிச் சென்றார்.

இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்த  திமுக பிரமுகர்கள் அந்தக் கடையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அந்த கடையை மூட உத்தரவிட்டனர். விசாரணையில் அந்த தேனீர்  கடை கடந்த ஒரு வாரத்துக்கு முன்புதான் திறக்கப்பட்டதாகவும், கடையில் 2 தினங்களுக்கு முன்புதான் டீ மாஸ்டராக பாஸ்கர் என்பவர் வேலைக்கு சேர்ந்தார் என்பதும்  தெரியவந்தது.

Read More : திமுகவைச் சேர்ந்த நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத் தலைவர் பதவி விலகல் - விசிக ஏற்குமா?

இதனைத் தொடர்ந்து, பணகுடி  போலீசார் டீ மாஸ்டர் பாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்து  அவரை தேடி வந்தனர். நாகர்கோவில் சென்ற டீ மாஸ்டர் மீண்டும் காவல்கிணறு வந்த போது, அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது, காவல்துறையினரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

Must Read : அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம்.. பாதுகாப்பு கோரி பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் மனு..

இந்நிலையில், டம்ளர் வீசப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரித்ததில் குறைந்த சம்பளத்தில் டீ மாஸ்டராக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்புதான் அந்த கடையில் பணிக்கு சேர்ந்ததாகவும், முதல்வர் வரவேற்பு இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் இந்த கடை இருந்தபோதிலும், போலீசார் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாகவும் இதனால், கடையில் தேநீர் குடிக்க கூடியிருந்த மக்கள் மற்றும் முதலமைச்சரை காண கடைவாசலில் கூடியிருந்த மக்களை அங்கிருந்து காவல்துறையினர் விரட்டியதால், கடை விற்பனை பாதிக்கப்படும் என நினைத்த டீ மாஸ்டர் ஆத்திரத்தில் முதலமைச்சர் வாகனம் சென்ற கார் மீது டம்ளரை வீசியதாகவும் சொல்லப்படுகிறது.
Published by:Suresh V
First published:

Tags: Arrested, MK Stalin, Tirunelveli

அடுத்த செய்தி