நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பயிலும் 5-வது வகுப்பு மாணவர் முள் ஆணி பலகை மீது அமர்ந்து 8 மணி நேரம் தொடர்ந்து தவில் வாசித்து சாதனைப் படைத்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தை சேர்ந்தவர் விஜய் ரஞ்சித். இவரது மனைவி ஷோபனா. இவர்களுக்கு ராஜா சுஜித் என்ற 11 வயது மகன் உள்ளார். அவர் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பால கிருஷ்ணா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இசையில் ஆர்வம் கொண்ட அவர் உலக சாதனை படைக்க வேண்டும் என்பது அவருடைய ஆசையாக இருந்து வந்துள்ளது.
அதனை நிறைவேற்றும் பொருட்டு சாதனை முயற்சியாகவும் ராஜா சுஜித் ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த கோரியும் உலக அமைதிக்காகவும் முள் ஆணி பலகையில் அமர்ந்த நிலையில் 8 மணி நேரம் தொடர்ந்து தவில் வாசித்துள்ளார்.

ஆட்சியருடன் ராஜா சுஜித்
மேலும் மாணவன் ராஜ சுஜித் தவில், டிரம்ஸ் போன்ற இசை கருவிகளையும் வாசிப்பதில் கைதேர்ந்தவர் ஆவார். இவருக்கு அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஹமீது என்ற ஆசிரியர் இசைப் பயிற்சி அளித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து பயிற்சி பெற்ற அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு 8 மணிநேரம் முள்படுக்கை மீது அமர்ந்து தவில் வாசித்துள்ளார். அடுத்து இருபத்தி ஐந்து மணி நேரம் தொடர்ந்து கடம் வாசிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதன் முன்னோட்டமாக அடுத்த சில நாட்களில் 12 மணிநேரம் முள் படுக்கை மீது அமர்ந்து கடம் வாசிக்க உள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிறுவனம் அவரது சாதனையை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது. இவரது சாதனை குறித்து அறிந்த திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் மாணவரை வரவழைத்து அவரை பரிசு வழங்கி பாராட்டி உள்ளார். மாணவரை பள்ளி நிர்வாகமும் பாரட்டியதோடு அவரது சாதனைகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து நிர்வாகம் உறுதுணையாக உள்ளது.
வடக்கன்குளம் பகுதியில் வியாபாரியாக உள்ள ராஜா சுஜித்தின் தந்தை விஜய் ரஞ்சித் மகனின் சாதனைக்கு உறுதுணையாக உள்ளார். சிறுவயதில் இருந்தே இசை மீது ஆர்வம் கொண்ட அவர், கிடைக்கும் இசைக்கருவிகளை அனைத்தும் பயன்படுத்தி ஏதாவது இசையை இசைத்துக் கொண்டே இருப்பார். தற்போது கடம், தவில், டிரம்ஸ் ஆகியவற்றில் சேர்ந்து விளங்குகிறார். உலக சாதனை படைத்து சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.