ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் அட்டூழியம்.. போலீசிடம் தகவல் கூறிய முதியவர் கொலை - நெல்லையில் பரபரப்பு
ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் அட்டூழியம்.. போலீசிடம் தகவல் கூறிய முதியவர் கொலை - நெல்லையில் பரபரப்பு
ரேஷன் அரிசி கடத்தல்.. தகவல் தெரிவித்த 63 வயது முதியவர்
Ration Shop | ஏழ்மை நிலையிலும் அரசு ரேஷன் கடைகளில் நடைபெறும் அரிசி கடத்தல் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்த 63 வயது முதியவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மேலப்பாளையம் அருகே 63 வயது முதியவர் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர்கள் குறித்து காவல்துறையிடம் தகவல் தெரிவித்ததால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் ராஜா நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி வயது 63. அங்குள்ள நியாய விலை கடையில் எடையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாலை வீட்டில் இருந்து மேலப்பாளையம் பகுதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு தனது சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தனது வீடு இருக்கும் தெரு அருகே சென்ற நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் வெங்கடாசலபதியை சைக்கிளில் இருந்து கீழே தள்ளிவிட்டு சரமாரியாக வெட்டி விட்டு தப்பியதாக தெரிகிறது.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மேலப்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கிய அவர்களின் முதல் கட்ட விசாரணையில் நியாய விலை கடையில் பணியாற்றிய அவர் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த நபர்கள் நண்பர்கள் உதவியுடன் வெங்கடாசலபதியை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் அந்த கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏழ்மை நிலையிலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் நோக்கில் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த வெங்கடாசலபதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற அராஜகங்கள் தலைதூக்கா வண்ணம் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யப்படுபவதோடு அவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்கப் பெற வேண்டும் அவ்வாறு தண்டனை கிடைத்தால் மட்டுமே ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் அராஜகங்களில் ஈடுபடுவோர் களையும் தடுக்க முடியும் என்பது நடுநிலையாளர்களின் கருத்தாக உள்ளது.
செய்தியாளர் : ஐயப்பன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.