நெல் கொள்முதல் செய்ய விவசாயிடம் லஞ்சம்.. கையும் களவுமாக பட்டியல் எழுத்தாளர் கைது
நெல் கொள்முதல் செய்ய விவசாயிடம் லஞ்சம்.. கையும் களவுமாக பட்டியல் எழுத்தாளர் கைது
விவசாயிடம் லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தாளர்
Tirunelveli District : மாவட்ட ஆட்சியர் எச்சரித்த நிலையில் விவசாயிடம் லஞ்சம் பெற்ற பட்டியல் எழுத்தாளர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் தற்போது பிசான சாகுபடியின் கீழ் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து அறுவடை செய்து வருகின்றனர். இந்த நிலையில், முன்னீர் பள்ளத்தை சேர்ந்த விவசாயி ராமையா என்பவர் தனது நெல் மூட்டைகளை விற்பனை செய்வது தொடர்பாக முன்னீர்பள்ளம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தாளர் தர்மராஜை அணுகியுள்ளார். அதற்கு தர்மராஜ் நெல்லை கொள்முதல் செய்ய தனக்கு மூட்டை ஒன்றுக்கு தலா 45 ரூபாய் வீதம் 3,825 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.
லஞ்சம் வழங்க விருப்பமில்லாத விவசாயி ராமையா இதுகுறித்து நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசாரின் அறிவுரைப்படி இன்று ராமையா 3,825 ரூபாய் பணத்தை தர்மராஜிடம் வழங்கினார். அப்போது மறைந்திருந்த நெல்லை லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ராபின் தலைமையிலான குழுவினர் தர்மராஜாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். ஏற்கனவே நெல்லை மாவட்டத்தில் போதிய அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை என விவசாயிகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.
மேலும் கொள்முதல் நிலையங்களில் இதுபோன்று லஞ்சம் தலைவிரித்தாடுவதாக பலமுறை விவசாயிகள் ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனர்.
இதையடுத்து கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து தங்கள் நெல்லை விற்பனை செய்து வங்கி மூலம் நேரடியாக பணம் பெறலாம் எனவும், கொள்முதல் நிலையங்களில் எந்தவித கட்டணமும் செலுத்தவில்லை மீறி யாராவது கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் உள்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்த நிலையில் விவசாயிடம் லஞ்சம் பெற்ற பட்டியல் எழுத்தாளர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.