நெல்லை மாவட்டம் தாழையூத்தை அடுத்த பண்டாரவிளையை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி சுமதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் குடும்பத்துடன்
திருநெல்வேலி சந்திப்பு அருகே சி.என். கிராமத்தில் வசித்து வந்தனர். இந்தநிலையில் சுமதி தனது 8 வயது மகளுக்கு விஷத்தை கொடுத்ததோடு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்து, அருகில் உள்ள உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் இருவரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சுமதியின் 8 வயது மகள் உயிரிழந்தார். தொடர்ந்து சுமதியும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை சந்திப்பு காவல்துறையினர் சுமதியின் கணவர் மாடசாமி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் மாடசாமி சுமதி தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மாடசாமி தனது சொந்த ஊரான பண்டார விளைக்கு சுமதியை அழைத்ததாக தெரிகிறது. அதற்கு அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். குறிப்பாக சம்பளப் பணம் செலவு செய்வது தொடர்பாக மாடசாமி சுமதியிடம் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
Must Read : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு- உயர் நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம்
சம்பவத்தன்று வாக்குவாதம் முற்றியதால் மனவேதனையில் சுமதி தனது குழந்தையுடன் சேர்ந்து தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் மாடசாமியிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் 8 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததோடு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
செய்தியாளர் - ஐயப்பன், நெல்லை.
-----------------------------------------------------------------------------------------------
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.