நெல்லையில் ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகன ஓட்டிகள்; வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்பும் போலீசார்!

வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் போலீசார்

வாகனங்களில் செல்வோர் கடைகளில் பொருட்கள் வாங்க செல்கிறேன், மருந்து வாங்க செல்கிறேன் என்று ஏதாவது ஒரு காரணத்தை கூறுகின்றனர்.

  • Share this:
    நெல்லையில் ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் போலீசார், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் எச்சரித்து அனுப்புகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனோ இரண்டாம் அலையை கட்டுப்படுத்த நேற்று முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி மாநகர் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக நெல்லை வண்ணாரப்பேட்டை, நெல்லை சந்திப்பு, பேட்டை, தச்சநல்லூர் ஆகிய இடங்களில் போலீசார் முக்கிய சாலையில் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். முழு ஊரடங்கு என்றபோதும் நெல்லையில்  நேற்றும் இன்றும் இருசக்கர வாகனங்கள் சகஜம் போல் அதிகளவில் வந்து செல்கிறது.

    இதேபோல் நான்கு சக்கர வாகனங்களும் அதிகளவில் செல்வதால் அவற்றை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். அதாவது நண்பகல் 12 மணி வரை மளிகை கடைகள் காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

    எனவே வாகனங்களில் செல்வோர் கடைகளில் பொருட்கள் வாங்க செல்கிறேன், மருந்து வாங்க செல்கிறேன் என்று ஏதாவது ஒரு காரணத்தை கூறுகின்றனர். வாகன ஓட்டிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று டிஜிபி திரிபாதியும் ஏற்கனவே போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

    இதன் காரணமாக ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகன ஓட்டிகளை கட்டுபடுத்த முடியாமல் நெல்லை மாவட்ட போலீசார் திணறி வருகின்றனர். இருப்பினும் ஊரடங்கு மீறி வெளியே வரும் வாகன ஓட்டிகளை போலீசார் மடக்கிப் பிடித்து, என்ன காரணத்திற்காக வெளியே செல்கிறீர்கள் என்று விசாரிக்கின்றனர்.

    உரிய காரணம் சொன்ன பிறகு போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பி விடுகின்றனர். விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    செய்தியாளர் - ஐயப்பன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: