தந்தை விபத்தில் மரணம்.. தாய் கொரோனாவால் மரணம்.. நிர்கதியாய் தவிக்கும் சிறுவர்கள்..

நிர்கதியாய் தவிக்கும் சிறுவர்கள்..

மூன்றாவது மகனான சிறுவன் செல்வின் ராஜிக்கு தந்தை இறக்கும் போது கைக்குழந்தையாக இருந்துள்ளான். தற்போது தாய் இறந்ததும் அவனுக்கு தெரியவில்லை.

  • Share this:
    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே முனஞ்சிபட்டியை அடுத்த கிராமம் துத்திகுளம். இதனை சேர்ந்தவர் ஜெப மாணிக்கராஜ் லாரி ஓட்டுநரான இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஞான மரிய செல்வத்திற்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஸ்டீபன்ராஜ், தர்மராஜ், செல்வின் ராஜ் என மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    ஸ்டீபன் ராஜ், தர்மராஜ் ஆகிய இருவரும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் நிலையில் செல்வின் ராஜ் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் ஜெப மாணிக்கராஜ் உயிரிழந்தார். சோகத்தில் இருந்த குடும்பத்திற்கு கைம்பெண் என்ற அடிப்படையில் ஞான மரிய செல்வத்திற்கு அங்கன்வாடி பணியாளர் பணி கிடைத்துள்ளது. கணவனை இழந்த நிலையில் மூன்று மகன்கள் மற்றும் மாமியாருடன் குறைந்த வருமானத்தில் ஞான மரியசெல்வம் வசித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கொரோனா  இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் இந்தச் சூழலில் அந்தப் பெரும் தொற்று  10 நாட்களுக்கு முன்பாக ஞானம் மரிய செல்வத்திற்கு  ஏற்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு இருப்பதை அறிந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்த போதிலும் சிகிச்சை பலனின்றி கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    சிறுவர்களின் பெற்றோர்


    இதனால் வயதான மாமியார் மற்றும் மூன்று குழந்தைகள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மிகக் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை கௌரவமாக நடத்திவந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று தாயின் உயிரை குடித்ததால் சிறுவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கும் சூழல் ஏற்பட்டது. அதிலும் மூன்றாவது மகனான சிறுவன் செல்வின் ராஜிக்கு தந்தை இறக்கும் போது கைக்குழந்தையாக இருந்துள்ளான். தற்போது தாய் இறந்ததும் அவனுக்கு தெரியவில்லை.

    அவர்களுடைய கல்வி வாழ்வாதாரம் எதிர்காலம் அனைத்தும் இருண்ட நிலைக்கு தள்ளப்பட்டது. அவர்களுக்கு தெரியாவிட்டாலும் அது குறித்த கவலை அவர்களின் பாட்டி அன்னத்திற்கு ஏற்பட்டது.  பேரன்களை வைத்து கொண்டு வயதான இந்த காலத்தில்தான் எப்படி வாழ  முடியுமென அவர் ஏக்கத்துடன் காணப்படுகிறார். தொற்று பாதிப்பு சிறுவர்களுக்கும் பாட்டி மரியபுஷ்பத்திற்கும் இல்லாவிட்டாலும் அவர்கள் நிராதரவாக இருக்கும் சூழல் உள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆட்சியர் விஷ்ணு உத்தரவுப்படி திருநெல்வேலி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரமேஷ் வட்டாட்சியர் ஆகியோர் துத்திகுளம் கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். வயதான அந்தப் பெண்மணிக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு 18 வயது வரை அவர்களுடைய கல்வி செலவையும் ஏற்பதாக நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் தெரிவித்தார்.

    சிறுவர்களின் படிப்பு எதிர்காலத் தேவைக்கான உதவி ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக அரசின் வழிகாட்டுதலின்படி செய்யப்படும் எனவும் அவர் உறுதியளித்தார் மேலும் சில தனியார் அமைப்புகளும் அவர்களுக்கு உதவ முன்வந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    அவர்களின் உறவினர் ஒருவர் கூறுகையில் இந்த குடும்பம் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது சிறுவர்களுக்கு தேவையான படிப்பை இலவசமாக வழங்குவதுடன் எதிர்காலத்தில் அவர்களுக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்குவதற்கான உத்தரவாதத்தையும் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    சிறுவர்களின் பாட்டி அன்ன புஷ்பம் பேசுகையில் 2005 ஆம் ஆண்டு எனது கணவரை இழந்து விட்டேன் 2010 இல் மகனுக்கு திருமணம் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு அவனும் விபத்தில் உயிரிழந்து விட்டான். மருமகள், பேரன்கள் மூவர், நான் என ஐந்து பேரும் மருமகளின் சொற்ப வருமானத்திலும், நான் கூலி வேலை செய்வதால் கிடைக்கும் வருமானத்திலும் குடும்பம் நடத்தி வந்தோம். பெருந் தொற்றுநோய் காரணமாக அவளும் எங்களை விட்டு சென்று விட்டார். இதன் காரணமாக என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப் போய் உள்ளோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    அரசு உதவி , தரமான கல்வி உள்ளிட்டவைகள்  ஏழையான எங்களுக்கு  கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை கொடுத்தார்.  ஆறாண்டு இடைவெளியில் மிகச்சிறிய வயதில் தந்தை தாய் என இருவரையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் இந்த குடும்பத்தை காப்பாற்ற அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை செய்தியாளர் ஐயப்பன்
    Published by:Arun
    First published: