நெல்லை பாளையங்கோட்டையில் 38-வது வார்டு திமுக செயலாளர் பொன்னுதாஸ் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை ஆறு தனிபடைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நெல்லை பாளையங்கோட்டை தெற்கு பஜார் பகுதியில் திமுக 38 வார்டு செயலாளராக இருப்பவர் அபே மணி என்று அழைக்ககூடிய பொன்னுதாஸ் ( வயது 38 ). இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீடு திரும்பிய நிலையில் வீட்டின் வாசல் வரை பின் தொடர்ந்து காரில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் பொன்னுதாஸை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய நெல்லை மாநகர காவல் ஆணையர் துரை குமார் ஆறு தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. தெற்கு பஜாரை உள்ளடக்கிய மாநகராட்சி வார்டு பாளையங்கோட்டை பகுதியில் வருகிறது. இந்த வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பொன்னுதாஸ் தனது தாயை நிறுத்த திட்டமிட்டு இருந்துள்ளார். மாவட்ட திமுகவின் ஆதரவும் பொன்னு தாசுக்கு ஆதரவாக இருந்த நிலையில் அவருக்கே சீட் உறுதியாகி உள்ளது.
இந்தசம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் கொலைக்கு பயன்படுத்திய கார் குற்றாலம் சாலையில் காந்திநகர் பழைய பேட்டை பகுதியில் சென்றதாக தெரிகிறது. இதனால் குற்றவாளிகள் கேரளா சென்று இருக்கலாம் என தனிப்படை போலீசார் அண்டை மாநிலமான கேரளாவிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் முன்விரோதம் காரணமாக காவல் துறையினர் சந்தேகிக்கும் நபர்களின் ஊர்களான விருதுநகர் மற்றும் கீழ ஆம்பூர் பகுதிகளுக்கும் சிறப்பு படையினர் சென்றுள்ளதாக தெரிகிறது.
மேலும் உயிரிழந்தவரின் தாய் பேச்சியம்மாள் கூறுகையில் கட்சிக்காக உண்மையாக உழைப்பான் அவனோடு இணைந்து நானும் திமுகவுக்காக கடுமையாக உழைத்துள்ளேன் எனது கணவர் எனது மகன் ஆறு வயது இருக்கும் போது உயிரிழந்தார். இப்போது எனது மகனுக்கும் சிறிய வயதில் உயிரை பறித்து விட்டனர். கட்சிக்காக உழைத்த எனது மகனின் குடும்பத்தை கட்சி தான் காப்பாற்ற வேண்டும். இரண்டு குழந்தைகளுடன் தவிக்கும் எனது மருமகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்றார்.
உறவினர் கூறுகையில் பார் ஏலத்தில் எடுத்துள்ளான் இன்னும் தொடங்கபடவில்லை யாருடனும் அவருக்கு முன்விரோதம் இல்லை தேர்தல் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்று இருக்கலாம் என்றார். முன்னதாக திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வாஹாப் மாநகர செயலாளர் ஏ.எல்.எஸ் லட்சுமணன் ஆகியோர் உயிரிழந்த பொன்னுதாஸ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு ஒரு லட்ச ரூபாய் நிதியும் வழங்கினர்.
உள்ளாட்சித் தேர்தல் சீட் பெறுவதில் ஏற்பட்ட தகராறு பார் ஏழாமிடத்தில் எடுத்த தகராறு என எதை எடுத்துக் கொண்டாலும் உட்கட்சி பிரச்னை காரணமாகவே பொண்ணு தாஸ் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடித்துவிட்டு இருக்கும் நிலையில் குற்றவாளிகள் அடையாளம் குறித்து பொண்ணு தாஸின் குடும்பத்தினரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்தார். திருநெல்வேலி மாநகரத்தில் நடந்த அரசியல் கொலையால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் : P.S.சிவமணி (நெல்லை)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.