நெல்லையில் சீட்டுப்பணம் தராததால் ஆத்திரத்தில் தச்சுச்தொழில் பணியாளர் தீக்குளிப்பு..
நெல்லையில் சீட்டுப்பணம் தராததால் ஆத்திரத்தில் தச்சுச்தொழில் பணியாளர் தீக்குளிப்பு..
அம்பாசமுத்திரம் அருகே சீட்டு போட்ட பணத்தை தர மறுத்ததால் வேதனை அடைந்த இளைஞர் சீட்டு கட்டியவர் கண் முன்னே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார். பதரவைக்கும் காட்சிகள் வெளியான நிலையில் தற்கொலைக்கு தூண்டுதல் வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரம் என்ற பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தச்சுத் தொழில் செய்து வந்துள்ளார். கஸ்பா என்ற பகுதியை சேர்ந்த மரிய செல்வம் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் தொகைக்கான சீட்டு போட்டுள்ளார் பாலசுப்பிரமணியன். ஒருமுறை கூட சீட்டு பணத்தை தவறாமல் கட்டி வந்தார். இந்நிலையில் சீட்டு முதிர்வு காலம் அடையவே மரிய செல்வத்திடம் சீட்டு பணத்தை கேட்டுள்ளார்.ஆனால் மரிய செல்வமோ பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து அலைக்கழித்துள்ளார்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை மரிய செல்வத்தின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பாலசுப்பிரமணியன் தனது பணத்தை தர வேண்டும் இல்லை என்றால் தன் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளார். ஆனால் மரியசெல்வம் அதை கண்டுகொள்ளவே இல்லை எனத் தெரிகிறது. பேசிக்கொண்டே இருந்த பாலசுப்பிரமணி திடீரென தன்மீது பெட்ரோல் ஊற்றியுள்ளார்.
இதை பார்த்த மரியசெல்வமோ அதை தடுக்காமல் தன் வாகனம் தீ வைக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் வாகனத்தை தள்ளி வைத்துள்ளார். அதற்குள் பாலசுப்பிரமணி தன் உடலில் தீ வைத்துக்கொள்ள தீ உடல் முழுவதும் பரவியது.
ஆனால் எந்த பதற்றமோ பரபரப்போ இல்லாத மரியசெல்வம் அங்கிருந்து நகர்ந்து சென்றார். யாரும் தடுக்காததால் தீ பரவிய நிலையில் பாலசுப்பிரமணியன் அதே இடத்தில் சுருண்டு விழுந்துள்ளார்.அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் பாலசுப்பிரமணியம் ஆம்புலன்ஸ் மூலம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தற்போது மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் மரிய செல்வத்தை விக்கிரமசிங்கபுரம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் போலீசார் மரிய செல்வத்தை கைது செய்தனர். பாலசுப்பிரமணியம் தற்கொலைக்கு முயன்ற காட்சி இணையத்தில் வைரலாக பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.