திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 4 மையங்களில் எண்ணப்படுகின்றன. வாக்குப் பதிவு மையங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துணை ராணுவப்படை மற்றும் தமிழ்நாடு காவல் துறையினர் என துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. திருச்சி கிழக்கில் அதிமுக வேட்பாளராக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி மேற்கில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வேட்பாளர்களாக உள்ளனர்.
இதில், திருச்சி மேற்கு தொகுதி மின்னணு வைக்கப்பட்டுள்ள 'ஸ்ட்ராங் ரூம்' அருகே மடிக் கணினியுடன் ( லேப் டாப்) ஒரு இளைஞர் நேற்று மாலை முதல் சுற்றி வந்துள்ளார். சந்தேகத்தில் அவரிடம் திமுக முகவர்கள் விளக்கம் கேட்டுள்ளனர். அவருடைய பதில் சந்தேகத்தை தர அவரை சூழ்ந்து கொண்டு திமுக முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திமுக மாநகரச் செயலாளர் அன்பழகன், வழக்குரைஞர் பாஸ்கர் உள்ளிட்டோர் அங்குள்ள அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
லேப் டாப் கொண்டு வந்தவர் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர் கொண்டு வந்த லேப் டாப் பதிவு செய்யப்படவில்லை. எனவே அனுமதியின்றி லேப் டாப் கொண்டு வந்ததால் சந்தேகம் உள்ளதாக திமுகவினர் குற்றச்சாட்டினர்.
இதுகுறித்து கேட்டதற்கு, கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிக்கு வந்த ஊழியர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே மையத்தில் LED டிவிக்களைப் பொருத்த மின்னணு பொருட்களை கொண்டு வந்த வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கும் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அங்கு வந்த திருச்சி கிழக்கு திமுக வேட்பளர் இனிகோ இருதயராஜ், ஏற்கனவே இது போல் ஓரு வாகனம் சந்தேகத்திற்கிடமாக வந்ததாக குற்றம்சாட்டினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: TN Assembly Election 2021, Trichy