திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு காரை ஓட்டியதில் ஒருவர் புளியமரத்தில் வேகமாக மோதி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த ஜெய்தேவ் (வயது 22), என்பவரும் அவரது நண்பர் வினோமேத்திவ் (வயது 22), என்பவரும் நேற்று நள்ளிரவு தனித்தனி காரில் சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் இருந்து லால்குடி நோக்கி புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். நள்ளிரவு நேரம் என்பதால் சாலை போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
அப்போது நண்பர்கள் இருவருக்கும் இடையே காரில் யார் முன்னே செல்வது என போட்டா போட்டி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இரண்டு பேரும் சாலையில் அதிவேகமாக காரை இயக்கினர்.
மரத்தில் மோதிய கார்
இரண்டு பேரின் கார்களும் சாலையில் சமமாக வந்தபோது திடீரென இரண்டு கார்களும் ஒன்றை ஒன்று உரசிக்கொண்டதனால் ஜெய்தேவ் ஓட்டிச் சென்ற கார் சாலையோரத்தில் இருந்த புலியமரத்தில் வேகமாக மோதி முன்பக்கம் முற்றிலும் அப்பளம்போல் நொறுங்கியது.
இதில் ஜெய்தேவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வினோமேத்திவ் ஓட்டி வந்த கார் எதிரே வந்த சரக்கு வேனின் மீது மோதிவிட்டு சிறிது தூரம் சென்று சாலையோரத்தில் நின்றது. இதில் அவர் உடலில் பலத்த காயமடைந்தார்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கி பலியான ஜெய்தேவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த வினோமேத்திவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் : இ.கதிரவன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.