கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை: சேகர்பாபு!

சேகர்பாபு

இறைவன் சொத்து இறைவனுக்கே என்கிற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

  • Share this:
கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும்  இறைவன்  சொத்து இறைவனுக்கே  என்கிற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து  திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி - ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் ஆய்வு செய்தனர். யானை பராமரிப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டனர்.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஐந்தாண்டுகள் கோவில்களில் யானை பாகன்களாக பணியாற்றும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை. விரைவில் அனைவருக்கும் பணி நிரந்தர ஆணை வழங்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர்,  தமிழ்நாட்டில் 180 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிக்கப்பட்ட திருக்கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் , கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். யார் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  இறைவன் சொத்து இறைவனுக்கே என்கிற அடிப்படையில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என அவர் கூறினார்.

மேலும் படிக்க: ரயில்வே தொழிற் பழகுநர் இடங்களுக்கான தேர்வு பட்டியல் வெளியீடு: 90% தமிழ்நாட்டினருக்கு வாய்ப்பு


மேலும், “கோயில்களில் உள்ள அறங்காவலர் குழுவில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதற்கு தக்கார் நியமிக்கப்பட்டு அந்த பிரச்சனைகளை சரி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அறங்காவலர் குழு அமைப்பதற்கான சட்ட விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டுகள் இருந்த குழுவின் பதவிக் காலம், அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில்  இரண்டாண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: உயிர்பலிக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்- சகோதரனாக கேட்கிறேன்: முதல்வர் !


திருக்கோவில் நிலங்கள் மன்னர்கள், ஜமீன்தார்கள் இனாமாக கொடுத்தது என்று குறிப்பிட்ட அமைச்சர் சேகர்பாபு, அந்த நிலங்களுக்கு பட்டா கொடுக்க இயலாது என்றும் மயிலாடுதுறையில் அவ்வாறாக பட்டா கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே திருக்கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு திருத்தணி,  சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய கோயில்களில் வரும் 16ம் தேதி முதல் மூன்று வேளை அன்னதானத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Murugesh M
First published: