புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூரை சேர்ந்தவர் சின்னப்பன். கூலித்தொழிலாளி. இவரது இளைய மகன் முருகேசன் (வயது 27). லோடு ஆட்டோ டிரைவர்.
கடந்த, 1ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் விலாப்பட்டி அருகே இவர் லோடு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு சென்றபோது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், படுகாயமடைந்த முருகேசன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேற்சிகிச்சைக்காக, திருச்சி அண்ணல் மகாத்மா காந்தி மருத்துவமனையில் கடந்த 6ம் தேதி அனுமதித்தனர். அப்போது முருகேசன் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதையடுத்து, முருகேசனின் உறவினர்களிடம் உடல் உறுப்பு தானம் குறித்து மருத்துவர்கள் எடுத்துக்கூறி, அரசு விதிகளின்படி உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கு உறவினர்களிடம் சம்மதம் பெற்றனர்.
நேற்றிரவு 9 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை, விடியற்காலை 4 மணிக்கு நிறைவடைந்தது. இதில், முருகேசனின் இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இரண்டு கருவிழிகள் தானமாக பெறப்பட்டன.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதா மற்றும் மருத்துவர்கள் முருகேசனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின், முருகேசனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதா செய்தியாளர்களிடம் பேசியபோது, "திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலிலிருந்து இரண்டு சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் இரண்டு கண்களை அறுவை சிகிச்சை மூலம் நேற்று இரவு அகற்றினர்.
ஒரு கல்லீரல், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் இரு கண்கள், திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன.
மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, முழு மரியாதையுடன் அவரது குடும்பத்தாரிடம் இன்று காலை கொடுக்கப்பட்டது.
மேலும், மூளைச்சாவு அடைந்தவரின் உடலிலிருந்து தானமாக பெறப்படும் உறுப்புகள் மூலம் பலருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். எனவே பொதுமக்கள் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு பெற்று, அதனை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு முன்வர வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.