பக்தர்களை கவர்ந்த ‘வேக்சின்’ விநாயகர்!

’வேக்சின்’ விநாயகர்

சிலையின் ஒரு கையில் கோவாக்சின், மற்றொரு கையில் கோவிஷீல்டு என்று எழுதப்பட்ட சிரிஞ்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு கையில் கிருமிநாசினி ,முகக் கவசம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

  • Share this:
திருச்சி மன்னார்புரத்தில்   கொரோனா தடுப்பூசிகள், மாஸ்க், சானிடைசருடன் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.  இது பலரையும் கவர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு கோலங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். கணினி இயக்குவது, இசையமைப்பது, கிரிக்கெட் விளையாடுவது  இசைக் கருவிகள், நவீன கருவிகளை இயக்குவது போன்ற சிலைகளை வைப்பார்கள். பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பார்கள். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி இல்லை. வீடுகளில் வழிபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் அரசு வழிகாட்டுதல் படி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை. ஆனாலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகர் முழுக்க 1,300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகரில் பொது இடங்களில் வைக்கப்பட்ட  விநாயகர் சிலைகள் அறநிலையத்துறை மற்றும் போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டன. அதேநேரத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் 1 - 3 அடி உயரம் வரையிலான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, மன்னார்புரம் நடுத்தெருவில் அப்பகுதி இளைஞர்களால் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை பலரையும் கவர்ந்துள்ளது. மும்பையில் இருந்து கல் வேலைப்பாடுகளுடன் வரவழைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை மன்னார்புரத்தைச் சேர்ந்த சந்துரு மற்றும் நண்பர்கள் ஏற்பாட்டில் வீட்டின் முன்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி: இஸ்லாமியர்கள் சார்பில் சிறப்பு பூஜை!


கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த சிலையின் ஒரு கையில் கோவாக்சின், மற்றொரு கையில் கோவிஷீல்டு என்று எழுதப்பட்ட சிரிஞ்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு கையில் கிருமிநாசினி (சானிடைசர்) , மாஸ்க் (முகக் கவசம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க: மகாகவி பாரதி இறந்த நாளில் குழப்பம்: வரலாற்று பிழையை திருத்த கோரிக்கை!


பலரும் விநாயகர் சிலையை ஆர்வமாக பார்த்துச் செல்வதால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலைக்கு தீபாராதனை காட்டி, கொழுக்கட்டை, சுண்டல் உள்ளிட்டவற்றை படைத்து வழங்கி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Murugesh M
First published: