திருச்சி- கரூர் மாவட்ட எல்லையான முதலைப்பட்டியின், பிரதான சாலையை ஒட்டியுள்ள நெற்வயல் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது.
திருச்சி - கரூர் மாவட்ட எல்லையான முதலைப்பட்டியின், பிரதான சாலையை ஒட்டியுள்ள நெற்வயல் சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது. ஒரு வயலில் ஓராயிரம் மயில்கள் தோகைகள் விரித்ததை போல ரம்மியமாக தெரிகிறது. "சின்னார்" என்ற பாரம்பரிய நெல் வகை செழித்து வளர்ந்துள்ள அந்த வயல். நீல நிற தோகைகள், அதன் மையத்தில் பச்சை நிறத்தில் கதிர்கள், உச்சி வெயிலில் தகதகவென மின்னுகிறது அந்த பயிர்.
முதலைப்பட்டியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி மோகன் (43) என்பவர் அரிய பாரம்பரிய நெல் வகையை தனது வயலில் பயிரிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "எங்களது குடும்பத்திற்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. ஒரு ஏக்கரில் மல்லிகைச் செடிகள் பயிரிட்டுள்ளோம். மீதமுள்ள ஒரு ஏக்கரில், 'சின்னார்' என்ற பாரம்பரிய நெல் வகையை பயிரிட்டுள்ளேன்.
நான் கட்டுமான பொறியாளராக பணியாற்றி வந்தேன். கடந்த, 5 ஆண்டுகளாக தொழில் சரிவரவில்லை. இயற்கை விவசாயம் மீதான உந்துதல் எனக்கு அதிகம். எனவே, விவசாயத்தில் இறங்குவது என்று முடிவெடுத்தேன். அதுவும், உரம், பூச்சிக்கொல்லி மருந்து இல்லாமல், இயற்கையான முறையில், பாரம்பரிய நெல் வகையான கருப்பு கவுனி, சீரக சம்பா பயிரிட்டேன்.
தற்போது, "சின்னார்" வகை நெல்லை பயிரிட்டுள்ளேன். வழக்கம் போலவே, நமது பாரம்பரிய நெல் வகைகளுக்கான அனைத்து மருத்துவ குணங்களும் இந்த நெல்லுக்கு உள்ளது. தோகைகள் கருநீலமாக இருப்பதால், இப்பகுதி வழியே செல்பவர்கள் நின்று இந்த நெற்பயிரை பார்த்து, ரசித்து செல்கின்றனர். நமது நெல் பாரம்பரிய நெல் வகையை இப்படியாவது மக்கள் தெரிந்து கொள்கிறார்கள் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
இந்த வகை மட்டுமல்லாது , நமது பாரம்பரிய நெல் வகைகள் அனைத்தும் , கடும் மழையாக இருந்தாலும், வறட்சியாக இருந்தாலும் அதை தாக்குப்பிடித்து வளரக்கூடியவை.
ஐந்தாண்டுகளாக இயற்கை விவசாயம் செய்கிறேன். தொடர்ந்து இயற்கை விவசாயம் மட்டுமே செய்வது என்று முடிவெடுத்துள்ளேன். எனது அத்தனை முயற்சிக்கும் எனது மனைவி மற்றும் குடும்பத்தினர் துணை நிற்கின்றனர். அவர்களால் தான், கடினமாக இருந்தாலும் இந்த விவசாயத்தை தொடர்ந்து செய்கிறேன்.
பாரம்பரிய விதை நெல் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. தமிழக அரசே ஒரு பாரம்பரிய நெல் விதை பண்ணையை துவங்கி, என்னைப் போன்ற ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு விதைகளை வழங்கலாம். மேலும், விவசாய கூலி வேலைக்கு ஆள் கிடைப்பது பெரும் சிரமமாக இருக்கிறது. 100 நாள் வேலைக்கு செல்வதால், எனது வயலில் களை எடுப்பதற்கு கூட ஆள் கிடைப்பதில்லை.
நானே தான் தனியாளாக வேலை பார்க்க வேண்டியுள்ளது. எனவே, 100 நாள் வேலை பார்ப்பவர்களை விவசாய பணியில் ஈடுபடுத்தும் வகையிலான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்" என்றார்.
சின்னார் பயிர் சிறப்பு :
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே முதுகுளத்தூரின் கீழ்மானங்கரை கிராமத்தை சேர்ந்த புஷ்பம் என்ற பெண்மணி ஆடுதுறை ரக விதை நெல்லை பயிரிட்ட போது, பச்சை நிற பயிர்களுக்கு நடுவில், கத்தரி ஊதா நிறத்தில் ஒரு பயிர் இருந்தது.
அறுவடையின் போது ரோஸ் நிறத்தில் மாறியது. இதை தனியாக அறுவடை செய்து மீண்டும் மீண்டும் பயிர் செய்தார். முதுகுளத்தூர் வேளாண் அதிகாரிகள் இதற்கு "சின்னார்" என்று பெயரிட்டனர்.
அகமதாபாத்தில் உள்ள "தேசியக் கண்டுபிடிப்பு நிறுவனம்" இதற்காக புஷ்பத்துக்கு காப்புரிமை வழங்கியது. ஜனாதிபதி விருதும் அவருக்கு கிடைத்தது. சின்னார், 3 மாதக்கால பயிர். அதிக காற்று வீசினாலும் பயிர் சாய்வது இல்லை. ஒரு ஏக்கருக்கு, 30,000 ரூபாய் லாபம் வரை கிடைப்பதாக கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.