மும்மடங்கு பணத்தை திருப்பித் தருவதாக மோசடி: சிவகாசி ஜெயலட்சுமியையும் ஏமாற்றிய நிதி நிறுவனம்!

ஜெயலட்சுமி

, போலீஸ் அதிகாரிகள் பலர் மீதும் 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலட்சுமி. தற்போது திருச்சியில் இயங்கும் நிதி நிறுவனம் தனது பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

  • Share this:
திருச்சியில் செயல்பட்டு வரும் நிதி நிறுவனமொன்று  மூன்று மடங்கு பணத்தை தருவதாகக் கூறி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெற்று மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி மாநகரம் மன்னார்புரத்தில் எல்பின் நிதி நிறுவனம் (மற்றும் அறம் மக்கள் நலச் சங்கம் செயல்பட்டு வருகின்றன.
இவற்றின் மீது பல்வேறு மோசடி புகார்கள் தொடர்ந்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் எல்பின் அலுவலகத்தில் முறையீடு செய்வதும் அடிக்கடி நடைபெறுகிறது.

விருதுநகர், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் எல்பின் நிறுவனத்தின் மீது ஏற்கனவே மோசடி & மிரட்டல் புகார்களை அளித்துள்ளனர். வருமான வரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே விசாரணையும் நடத்தியுள்ளனர்.

Must read: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதி - பக்தர்களுக்கு அனுமதி?


திருச்சி மாவட்டம் பிராட்டியூரைச் சேர்ந்த பொறியாளர்  மிதுன் சமேஷ் என்பவர், திருச்சி மாநகர காவல்  ஆணையரிடம் அண்மையில்  அளித்த புகாரில், ‘எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் 10 மாதத்திற்குள் 3 மடங்கு பணத்தை திருப்பித் தருவதாக கூறியதை நம்பி, இந்த  நிறுவனத்தில் கடந்த 2019 நவம்பர் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை பல்வேறு கட்டங்களாக  ₹ 72.82 லட்சம் முதலீடு செய்தேன். நண்பர்கள், உறவினர்கள் மூலம் மொத்தம் ₹ 2 கோடியே 18 லட்ச முதலீடு செய்துள்ளோம். இதை இரண்டு, மும்மடங்காக, 4 கோடியே 68 லட்ச ரூபாயை தருவேன் என்று ஆசை வார்த்தைகளைக் கூறினர்.  அதற்குரிய காசோலைகள் வழங்கினார்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால்,  அதை வங்கியில் செலுத்த சென்ற போது, அந்த அக்கவுண்ட்டில் பணம் இல்லை என்று சொல்லி விட்டதாகவும், பணத்தை நேரடியாக சென்று கேட்டபோது, பலமுறை அலைகழித்து, திரும்ப தராமல் மோசடி செய்து விட்டனர். கடந்த மாதம் சென்று பணத்தைக் கேட்ட போது,  அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தார்கள் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், போலீஸ் அதிகாரிகள் பலர் மீதும் 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலட்சுமி . அதன் பின்னர் எந்த பரபரப்பும் இன்றி ஒதுங்கியே வாழ்ந்து வந்தார்.  இச்சூழலில், தொடர் மோசடி புகாருக்குள்ளாகியுள்ள திருச்சி எல்பின் நிறுவனத்தில்  தான் 3.75 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாகவும் பணத்தை திரும்பி தரவில்லை என்றும் கூறி எல்பின் நிறுவனத்தின் முன்பு  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். நள்ளிரவு ஆகிவிட்டதால்,  போலீசார் சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து நேற்று  காலை முதல் மீண்டும் எல்பின் அலுவலகம் வந்தார்.  காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தார்.தன்னுடைய பணமும் தன் மூலம் 700க்கும் மேற்பட்டோர்  கொடுத்த பணத்தையும் எல்பின் நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்துள்ளாதாக  ஜெயலட்சுமி கூறுகிறார். பணம் முதலீடு செய்த பலரும் தன்னிடம் பணம் கேட்கிறார்கள். பலரும் கொரோனா காலத்தில் மருத்துவ செலவிற்கே பணமின்றி தவிப்பதாக கண்ணீர் விடுகின்றனர். எனவே முதலீடு செய்தபணத்தைத் திரும்ப தரும் வரை இங்கேயே இருப்பேன் என்றார்.

இதையும் படிங்க:  ஆந்திராவில் இருந்து கடத்திவந்து கஞ்சா விற்பனை: சென்னையில் 5 பேர் கைது!


மேலும், எல்பின் உரிமையாளர் ராஜா, அவரது தம்பி ரமேஷ் இருவரும்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாநில நிர்வாகிகளாக இருந்தனர். கடந்த 2019ம்  மக்களவைத் தேர்தலின் போது இவர்களது காரில் கொண்டு செல்லப்பட்ட ₹ 2 கோடி ரொக்கப்பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.  சில மாதங்களுக்கு முன்பு எல்பின் ராஜா, பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலையில்  சேர்ந்தார்.

களவாணி இயக்குநர் சற்குணம், நடிகர் விமலை வைத்து எங்க பாட்டன் சொத்து என்கிற  திரைப்படம் உட்பட 2 படங்களையும் தயாரித்துள்ளனர்.  கவிஞர் பா.விஜய் உள்ளிட்டோரிடமும் நெருக்கமாக இருந்துள்ளனர். திருச்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்த முக்கிய பங்காற்றினர். திரையுலக பிரபலங்களையும் அழைத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளனர். அவர்களோடு நெருக்கமாக இருப்பது போல் வெளிக்காட்டியுள்ளனர். எனவே திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த மோசடியில் தொடர்பிருக்கிறதா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Published by:Murugesh M
First published: