Home /News /tamil-nadu /

குழுமாயி அம்மன் குட்டிக்குடி திருவிழா.. ரத்தத்தை உறைய வைத்த 'மருளாளி'

குழுமாயி அம்மன் குட்டிக்குடி திருவிழா.. ரத்தத்தை உறைய வைத்த 'மருளாளி'

திருச்சி

திருச்சி

Trichy Kulumayee Amman Temple | மந்தைக்கு முன்புள்ள தேரின் அருகில் மருளாளி வந்ததும், கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட ஆட்டுக்குட்டிகள் மருளாளியிடம் தூக்கி கொடுக்கப்பட்டன

  திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில், ஆறுகண் பாலம்  அருகில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற குழுமாயி அம்மன் கோவில். சோழ மன்னர்களின் குலதெய்வமாக வணங்கப்பட்டு, தற்போது திருச்சி மாநகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது.

  பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குட்டிகுடித்தல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில், திருச்சி மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பங்கேற்பது வழக்கம்.இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம், 27ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 7ம் தேதி (திங்கட்கிழமை) இரவு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

  Also Read: ஆனந்தமாக சேற்று குளியல் போடும் திருவானைக்காவல் அகிலா யானை..!

  தொடர்ந்து, 8ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு காளியாவட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அம்மனை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் சுத்த பூஜை நடந்தது. அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்தார். வீடுகள் தோறும் மாவிளக்கு, தேங்காய், பழம், பூக்கள் வைத்து பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.

  'குட்டிக்குடி' விழா

  விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிகுடித்தல் விழா இன்று நடந்தது.  இதனையொட்டி புத்தூர் மந்தையில் குழுமாயி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.அங்கு, அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து அம்மனின் அருள்பெற்ற மருளாளி (சாமி ஆடுபவர்) சிவக்குமாரை பக்தர்கள் மேளதாளம் முழங்க அழைத்து வந்தனர்.அப்போது கொம்பு, பறை, தாரை, தப்பட்டை உள்ளிட்ட வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

  Also Read: கோவையில் அரசு பேருந்தில் டீசல் திருடிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

  பக்தர்களின் தோள் மீது அமர்ந்தபடி மருளாளி ஊர்வலமாக தூக்கி கொண்டு வரப்பட்டார். அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வந்த ஆட்டுக் குட்டிகளை வரிசையாக நிறுத்தி வைத்திருந்தனர். மந்தைக்கு முன்புள்ள தேரின் அருகில் மருளாளி வந்ததும், கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட ஆட்டுக்குட்டிகள் மருளாளியிடம் தூக்கி கொடுக்கப்பட்டன.  மருளாளி அவற்றின் ரத்தத்தை உறிஞ்சி குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். மருளாளி ஆடுகளின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் காட்சிகள் பக்தர்களை மயிர் கூச்செறிய செய்தது.

  அரசு குட்டி

  இவ்விழாவில், அரசு சார்பில் ஆட்டுக் குட்டிகள் கொடுப்பது தொன்று தொட்ட வழக்கமாக இருக்கிறது. அதன்படி, அரசு  சார்பில், திருச்சி மாவட்ட நிர்வாகத்தினால் வழங்கப்பட்ட ஆட்டு குட்டியின் ரத்தத்தை மருளாளி முதலில் குடித்தார். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன.

  திருவிழாக் கோலம்

  குட்டிக் குடித்தல் நிகழ்ச்சியையொட்டி, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால், புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகள் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. ஏராளமானோர் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கினர்.விழாவின் தொடர்ச்சியாக நாளை (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) சாமி குடிபுகுதலும் நடைபெறுகிறது.

  செய்தியாளர்: விஜயகோபால் (திருச்சி)
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Festival, Temple, Trichy

  அடுத்த செய்தி