Home /News /tamil-nadu /

திருச்சியில் உச்சத்தில் உட்கட்சி மோதல்: பல இடங்களில் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கிய தி.மு.க நிர்வாகிகள்

திருச்சியில் உச்சத்தில் உட்கட்சி மோதல்: பல இடங்களில் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கிய தி.மு.க நிர்வாகிகள்

திமுக

திமுக

திருச்சியில் கட்சி கட்டுப்பாட்டை மீறி தி.மு.க நிர்வாகிகள் பலர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில், திமுக 51, காங்கிரஸ் 5, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தலா, 2 வார்டுகள், மனிதநேய மக்கள் கட்சி ஒரு வார்டு என போட்டியிடுகின்றன.

ஆனால், திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களுக்கு எதிராக, பல இடங்களில் அக்கட்சி நிர்வாகிகள் சுயேட்சையாக வேட்பு மனுதாக்கல் செய்துள்ளதால், அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

'அதிருப்தி' அணிவகுப்பு'

எடுத்துக்காட்டாக, 54வது வார்டில் போட்டியிட முன்னாள் கவுன்சிலர் ராமமூர்த்திக்கும், தலைமை பொதுக்குழு உறுப்பினர் மூவேந்தனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் விட்டுக் கொடுக்க முன்வராத நிலையில், இவர்களுக்குப் பதிலாக, வட்டச் செயலாளர் புஷ்பராஜ் என்பவர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் அதிருப்தியடைந்த ராமமூர்த்தி சுயேட்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இதேபோல, 12வது வார்டில் பன்னீர்செல்வத்தை எதிர்த்து முன்னாள் வட்டச் செயலாளர் பாலமுருகன், 14வது வார்டில் திமுக வேட்பாளர் திருமாவளவனை எதிர்த்து, முன்னாள் கவுன்சிலர் வேலு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மீண்டும் ஆளுநருக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்ப முடிவு...சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூடுகிறது



15வது வார்டில் திமுக வேட்பாளர் தங்கப்பொண்ணுவை எதிர்த்து, திமுகவைச் சேர்ந்த விஜயா, 36வது வார்டில் திமுக வேட்பாளர் கார்த்திக்கை எதிர்த்து, திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த தர்மராஜ் போட்டியிடுகிறார். 46வது வார்டில் திமுக வேட்பாளர் கோ.ரமேஷை எதிர்த்து முன்னாள் கவுன்சிலர் உஷாராணி, 62-வது வார்டில் திமுக வேட்பாளர் சுபாவை எதிர்த்து கவிதா போட்டியிடுகிறார்.


கூட்டணி 'அவஸ்தை'

17வது வார்டில் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பிரபாகரனை எதிர்த்து, திமுக வட்டச் செயலாளர் மனோகரன், 39வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் ரெக்ஸை எதிர்த்து திமுகவைச் சேர்ந்த எல்லக்குடி மணிமாறன் போட்டியிடுகிறார்.

53வது வார்டில் திமுக வேட்பாளர் கலைச்செல்வியை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் ஹேமா, 65வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராஜாவை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் காளீஸ்வரன் என அதிருப்தி வேட்பாளர்கள் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது.

காரணம் என்ன?

திருச்சியில் உள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இடையே பனிப்போர் நிலவுகிறது. அவர்களது பூசல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் வெளிப்படையாக வெடித்துள்ளது. கடந்த ஓராண்டுகளாக சீட்டு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலபேர் பல லட்ச ரூபாயை செலவழித்துள்ளனர். இதையெல்லாம் இரண்டு அமைச்சர்களும் நன்கு அறிந்திருந்தும், வார்டுகளில் செல்வாக்கு இல்லாத, அவர்களுக்கு வேண்டிய நபர்களை தேர்தலில் நிறுத்தியுள்ளனர்.

எங்களது பண விரயம், கால விரயத்தை கணக்கிட்டால், அதைவிட இழப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை. எனவே, கட்சித் தலைமை எடுக்கும் எல்லா நடவடிக்கைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், நாங்கள் வெற்றிப் பெற்றால் எங்களது கட்சிக்கும், கூட்டணிக்கும் தான் சாதகமாக அமையும். அதனால், எங்களது வெற்றி மூலம் மாவட்ட தலைமைக்கு தக்க பாடம் புகட்டுவோம்" என்கின்றனர் அதிருப்தி வேட்பாளர்கள்.

மேயருக்கு ஆபத்து?

திமுகவில் அணிவகுத்துள்ள அதிருப்தி வேட்பாளர்களால், அதிமுக தரப்பு குஷியடைந்துள்ளது. 'சட்டமன்றத்தில் இழந்த வெற்றியை மாநகராட்சி தேர்தலில் ஈடு செய்வோம்' என்று குதூகலிக்கின்றனர். அதேநேரத்தில் திமுகவினரோ, 'அதிருப்தி வேட்பாளர்கள் வெற்றிப் பெற்று, சுயேட்சையாக இருப்பதால் எவ்வித பிரயோசனமும் இல்லை. வெற்றிப் பெற்ற பிறகு திமுகவிற்கு மீண்டும் வந்து விடுவர். இதனால், மேயர் பதவி கைநழுவி விடும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஆனால், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர். ஆகமொத்தத்தில், திருச்சி மாநகராட்சி தேர்தல் களம், அதிருப்தி வேட்பாளர்களாலும் அனல் பறக்கிறது என்பதே கள எதார்த்தம்.
Published by:Karthick S
First published:

Tags: DMK, Local Body Election 2022, Trichy

அடுத்த செய்தி